தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரை 2024 ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் இன்று (18) உத்தரவிட்டார்.
61 வயதான விசேட வைத்தியர் நேற்று மருத்துவமனையில் பெண் இளநிலை ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இளநிலை ஊழியர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக புற்றுநோயியல் நிபுணர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளநிலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக வைத்தியசாலைச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார், அதன் பின்னர் அவர் இளநிலை ஊழியர் ஒருவரைத் தாக்கியிருந்தார், பின்னர் மருத்துவமனை அதிகாரிகளால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த விசேட வைத்தியர் நேற்று காலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசேட வைத்தியர் தன்னை தாக்கியதாக பெண் கனிஷ்ட ஊழியர் குற்றம் சுமத்தியதோடு, சம்பவத்தை தொடர்ந்து குறித்த வைத்தியர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தானாக சென்று அனுமதி பெற்றதாக அவர் தெரிவித்தார்.