சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை பரப்பி ஏழு பேரை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் "மிசாதிடு" கும்பலுடன் நேரடியாக தொடர்புக்கொண்ட 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில், பௌத்த தத்துவம் எனக் கூறி பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வருவதாக கூறப்படும் ருவன் பிரசன்ன என்ற நபர் தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் போதே குறித்த 30 பேரும் இனங்காணப்பட்டுள்ளதுடன், இக் குழுவில் சில பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த முப்பது பேரை அவர்களது மூட நம்பிக்கை தொடர்பிலான கருத்துக்களிலிருந்து மீட்பதற்காக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.