இஸ்ரேலிய தரைப்படைகள், மூன்று நாட்கள் நடத்திய கடுமையான தாக்குதலை தொடர்ந்து காஸாவின் தெற்கு பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.
தெற்கு நகரமான கான் யூனிஸின் வடக்கில் தரைவழி நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கையின்போது, ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வார கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்ததில் இருந்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
போர் நிறுத்த காலத்தில் 240 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக காஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது.
போரின் ஆரம்ப கட்டங்களில் காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு நகரான கான் யூனிஸில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.