முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலையீட்டைத் தொடர்ந்து, பாம் எண்ணெய் உற்பத்திக்கு 2021ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கையில் பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் பயிரிடுவதற்கும் 2021 ஆம் ஆண்டு தடை விதித்து கோட்டாபய உத்தரவிட்டார்.
பாம் எண்ணெய் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என கருணாநாயக்க ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட தடையினால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பனை உற்பத்தியாளர் சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேயிலை மற்றும் ரப்பர் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தை விட பாம் எண்ணெய் பயிர்ச்செய்கை மூலம் அதிக அந்நிய செலாவணி வருவாயை ஈட்ட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஒரு ஏக்கர் பாம் பயிர்செய்கையில் மாதம் ரூ. 75,000 வருமானம் கிடைக்கும் என அவர்கள் கூறினர்.
அரசாங்கம் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மீண்டும் நாட்டில் பாம் பயிரிடுவதற்கு அனுமதியளிக்கும் என கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி ஜனவரி மாதம் தடையை நீக்குவதை உறுதி செய்வதாக அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.