கல்முனை - இஸ்லாமபாத் பகுதியில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில், அந்த நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அந்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சிறுவன் கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், குறித்த சிறுவனின் உடலில் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.