சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.
இன்று (27) காலை சிகிரிய குன்றை பார்வையிட விஜயம் செய்த குறித்த சுற்றுலாப் பயணி, குறுக்கு வீதியொன்றின் ஊடாக தனது தங்குமிடத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்களை மோட்டார் சைக்கிளில் எதிர்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் சுற்றுலாப் பயணியைத் தாக்கி அவரது பணப் பையைப் பறித்துச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதை அவதானித்த அப்பகுதியிலுள்ள இரண்டு சிறு பிள்ளைகள் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கவனித்து பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து குழந்தைகள் அறிந்ததும், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் எண்ணைத் தெரிவித்தனர், பின்னர் அது பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சீகிரிய பொலிஸார் சந்தேக நபர்களை 45 நிமிடங்களுக்குள் கண்காணித்து சுற்றுலா பயணிகளின் திருடப்பட்ட 225 அமெரிக்க டொலர்கள் மற்றும் ரூ. 20,000 பணத்துடன் பணப்பையை மீட்டனர். சந்தேகநபர்கள் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்தில் காயமடைந்த துருக்கி சுற்றுலா பயணி சீகிரிய பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)