இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் நடைபெற்ற வரும் மோதலில் நேற்று காணாமல் போனதாக கூறப்பட்ட இலங்கைப் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த பெண் கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இரு பிள்ளைகளின் தாயாவார்.
அவர் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு தாதியாக பணிபுரிய சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.