பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தில் பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தின் பணியாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் ஒரு பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும் பொரளையில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
விற்பனை நிலையத்திலிருந்து பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகும் வரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்பொருள் அங்காடி நிர்வாகமும் முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.