கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மூன்று கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (15) கைது செய்தது.
கைது செய்யப்பட்ட பெண் 26 வயதான இந்திய பிரஜை என்றும் அப்பெண் வர்த்தகர் என்றும் தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து வெள்ளிக்கிமை காலை 08.45 மணிக்கு வருகைதந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பெரிய அளவிலான ஆபரணப் பொருட்கள் அடங்கிய பல பொதிகளில் 1 கிலோ 748 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
மற்றைய பெண் 34 வயதான கொழும்பு ஜம்பட்டா தெருவில் வசிக்கும் இலங்கையர் என்றும் அவரும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை 05.50 மணியளவில் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 516 கிராம் 907 மில்லிகிராம் எடையுள்ள நகைகளை மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கம் உள்ளிட்ட சகல விசாரணைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே இந்த இரு பெண்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
தற்போது இந்த இரண்டு பெண்களும் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.