மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்கால சந்ததியினர் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (16) நுகேகொடையில் உள்ள அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றமடைய வேண்டும். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது பிள்ளைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீன மற்றும் இந்தியையும் கற்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜெனரேஷன் ஆல்பாவிற்கு (Gen Alpha) பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் போட்காஸ்ட்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கியல் (ரோபோடிக்ஸ்) ஆகியவற்றை கற்பிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன் டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை,'' என்றார்.
காலநிலை மாற்றம் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் 20 வருடங்களுக்குள் இலங்கை நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார். "ஐ.நா தலைவர் கூறியது போல நாங்கள் காலநிலை மாற்றத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாளும் போது உலகத்துடன் இணைந்து செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.