பாரிய போதைப்பொருள் கடத்தல், இலங்கையில் உள்ள பணக்காரர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் கப்பம், ஒப்பந்தப் பணத்திற்காக மனித படுகொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு வரும் 34 பாதாள உலக குற்றவாளிகள் துபாயில் பதுங்கி இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவர்களில் சிலருக்கு ஏற்கனவே சர்வதேச சிவப்பு வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாதாள உலகக் கும்பல் துபாயில் இரகசிய வாழ்க்கை வாழ்ந்து இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அன்னாசி மொரில், கொஸ்கொட சுஜீ, கிஹான் பொன்சேகா மற்றும் சித்திக் என்ற பாதாள உலக குண்டர்கள் தற்போது டுபாயில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பொலிஸ் புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், ஹீனத்யான மகேஷ், கெஹெல்பத்தர பத்மே, சீதுவே வருண, அஹுங்கல்லே லொகு பாட்டி மற்றும் சஞ்சீவ, அங்கொட ஜிலே, கஞ்சிபான இம்ரான், மன்னா ரமேஷ், கொஸ்கொட டில்ஷான், அஹுங்கல்ல மதுஷான் அப்ரு, நதீஷ் அப்ரு, கெசல்வத்தே தனுகா மற்றும் தனேஷ், ஜி, ஹன்கனமுல்லக இன்ஜி, ஹசன்னமுல்லக , துபாய் வருணா என்ற பாதாள உலகக் கும்பல் துபாயில் மறைந்திருந்து இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரந்தெனியவைச் சேர்ந்த சுத்தா மற்றும் ராஜு, மிதிகமவைச் சேர்ந்த ருவன் ஜயசேகர, லாஸ்ட் சூட்டியைச் சேர்ந்த டிலான் தரங்க (ஹரக்கட்டாவின் சீடர்கள்), நவகமுவின் லாலியா, கொலன்னாவைச் சேர்ந்த தனுஷ்க, அங்கொட பிரியங்கர, அவிஷ்க என்ற கிரிகொல்ல, சதுர்க பட்ட மஞ்சு ஆகியோர் இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க, மினுவாங்கொடை, கம்பஹா, நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, ஆடியம்பலம, சீதுவ, ஜாஎல, மீரிகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக கப்பம் கோரியும் கொலைமிரட்டல் விடுத்தும் இந்த பாதாள உலக குண்டர்களால் வர்த்தகர்கள், செல்வந்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த பாதாள உலக குண்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து மினுவாங்கொடை, ஹினாதயான கட்டுநாயக்க உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த பல செல்வந்தர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் பாதாள உலகக் கும்பல்களிடம் கப்பம் பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் அனைத்தும் டுபாயில் பதுங்கியிருக்கும் இந்த பாதாள உலக பலம் வாய்ந்தவர்கள் கொடுத்த ஒப்பந்தங்களே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.