இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது குடியுரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை சவால் செய்து அவருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுவை தாக்கல் செய்த சிவில் செயற்பாட்டாளர் ஓஷால ஹேரத், பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரினார். (யாழ் நியூஸ்)