தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம் சிக்கியது எப்படி? வெளியான பல விடயங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம் சிக்கியது எப்படி? வெளியான பல விடயங்கள்!


தங்கக் கடத்தலில் ஈடுபட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வசமாக சிக்கியுள்ளார். அவர் விமான நிலைய பிரமுகர் முனைய சலுகையை பயன்படுத்தி பலமுறை கடத்தலில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், மோசடியாளர்கள் என்ற பொது அப்பிராயம் மக்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில், அலி சப்ரி ரஹீம் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

அவர் சிக்கிக் கொண்ட சம்பவம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய் காலை எமிரேட் அரசுக்குச் சொந்தமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃப்ளை டுபாய், FZ 547, போயிங் 737 விமானத்தில் வரும் அலிசப்ரி ரஹீம் கடத்தல் பொருட்களுடன் வருவதாக, சுங்க புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு ஒருகொடவத்தையில் இருந்து செயல்படும் ஒரு தகவல் கிடைத்தது.

இதன்படி, வருவாய்ப் பணிப் படை – Revenue Task Force (RTF)- காலை 9.00 மணிக்கு தரையிறங்கும் விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் நேரடி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் RTF அனைத்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளையும் கண்காணிக்கிறது. அதாவது, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டதை உறுதி செய்வதாகும். விமான நிலையங்கள், கூரியர் சேவைகள், கிடங்குகள் மற்றும் பிற ஒத்த இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

RTF பிரிவின் பத்து பேர் கொண்ட குழு விமான நிலைய தகவல்களை சரிபார்த்து, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ரஹீம் அலி சப்ரியின் “உதவியாளர்” என வர்ணிக்கப்படும் மொஹமட் ஃபைரூன், எம்.பி.க்கு ஒரு நாள் முன்னதாக துபாய் சென்றதைக் கண்டறிந்தனர். இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று சப்ரியுடன் அதே ஃப்ளைடுபாய் விமானத்தில் கொழும்பு திரும்பினார்.

ஃப்ளைடுபாய் விமானம் வந்ததும், ஃபைரூன் இறங்கி, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் கட்டிடத்திற்குச் சென்றார். அவர் தனது சாமான்களை எடுத்துக்கொண்டு கிரீன் சனல் வழியாக நடந்தார் – இது அறிவிக்க வேண்டிய பொருட்கள் இல்லாதவர்களுக்கானது. அவர் உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பாக நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரியால் கைது செய்யப்பட்டார். ஃபைரூன் பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்களையும் அவர் தற்காலிகமாக கைப்பற்றினார். அவரது சாமான்களை சோதனை செய்ததில், அவரது பயணப் பொதியில் 19 மொபைல் போன்கள் (நன்கு அறியப்பட்ட பிராண்ட்) இருப்பது தெரியவந்தது. அவருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர் பயன்படுத்திய 2 செல்போன்களும் திருப்பி கொடுக்கப்பட்டன.

இது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் விமான நிலைய முனைய கட்டிடத்திற்கு வந்த சப்ரியை இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவர் வரவேற்றார்.இது வழக்கமான நடைமுறை. முனையத்தில் உள்ள விஐபி லிப்ட் வழியாக, அதிகாரி சப்ரியை விஐபி ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, விஐபி ஓய்வறையில் உள்ள இரண்டு அறைகளில் ஒன்றான கிரிஸ்டல் அறையில் ஒரு சோபாவில் அமர்ந்தார். சப்ரியிடம் கை பயணப்பொதி இருந்தது. சப்ரியின் பொதிகள் விஐபி ஓய்வறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக அந்த அதிகாரி புறப்பட்டார்.

சப்ரிக்கு சொந்தமான இரண்டு பொதிகள் விஐபி ஓய்வறைக்கு வந்தபோது, அவற்றை ஆய்வு செய்ய விரும்புவதாக சுங்க அதிகாரி ஒருவர் கூறினார். வழக்கமாக, அவை உடனடியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்படுகின்றன. அறிவிக்க ஏதாவது இருக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது, “என்னிடம் 40 மொபைல் தொலைபேசிகள் உள்ளன” என்று பதிலளித்தார். வேறு ஏதாவது இருக்கிறதா என்று மீண்டும் கேட்கப்பட்டது. கொஞ்சம் தங்கம் இருப்பதாகச் சொன்னார். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்யத் தொடங்கினர். அவர்களிடம் 2600 கிராம் தங்கம் கிடைத்தது. அது ஒரு பிசின் டேப்பால் மூடப்பட்ட பிளாஸ்டிக் பெட்டியில் இருந்தது. மற்றொரு பிளாஸ்டிக் பெட்டியில் 800 கிராம் தங்க நகைகள் இருந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இது இன்சுலேடிங் டேப் மூலம் சீல் வைக்கப்பட்டது.

அதன்பின் அதிகாரிகள் 91 மொபைல் போன்களை கண்டுபிடித்தனர்.

அவர்கள் சப்ரியை விஐபி ஓய்வறைக்குப் பக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது முதல் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தங்கம் மற்றும் தொலைபேசிகள் தனது சொந்த சாமான்களில் இருந்ததை சப்ரி ஒப்புக்கொண்டதாக சுங்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒரு முரண்பாடு இருந்தது. ஃபைரூன் வைத்திருந்த டுபாய் சுங்கத்தின் உரிமைக்கான ரசீதில், தங்கம் அவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டுபாய்க்கு வெளியே தங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அதிகாரம் மற்றும் அந்த எமிரேட்டின் சட்டப்பூர்வ தேவையடிப்படையில் இந்த ரசீது தேவைப்படும். இந்த அம்சமும் சுங்கத்துறை அதிகாரிகளின் வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பதிவு முடிந்ததும், சப்ரியை ஆர்டிஎஃப் குழுவினர் ஒருகொடவத்தையில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கு சப்ரியிடம் மேலும் விசாரணை நடந்தது. அதன்பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பிறகே சப்ரி விடுவிக்கப்பட்டார்.

சப்ரியின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். அவரது பெயர் ரஹீம் அலி சப்ரி என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அவர் இலங்கை கடவுச்சீட்டு இலக்கம்: D 5658824 வைத்திருந்தார்.

அவர் சில தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக மூத்த சுங்க அதிகாரி தெரிவித்தார். அவர் சுங்கத் தலைமை இயக்குநர் பி.பி.எஸ்.சி.நோனிஸூக்கு அழைப்பு விடுத்திருந்தார். தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தை முன்வைத்து அவர் தன்னை விடுவிக்க கோரியிருந்தார்.

சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

சமன் ஏக்கநாயக்க, அவர்களுக்கு இரண்டு அறிவுறுத்தல்களை வழங்கியதாக அவர் வெளிப்படுத்தினார். ஒன்று, சம்பவம் தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்தார். மற்றொன்று, சட்டம் மற்றும் நடைமுறைகளை மீறுவதற்கு எதிராக “வலுவான தடுப்பு நடவடிக்கை எடுப்பது” அவசியம் என்று குறிப்பிட்டார். சுங்கத்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியது.

விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்களை வெளியிப்பட்டன. கடத்தல் மன்னனாக அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து- ஏழு வாரங்களுக்குள் கொழும்பில் இருந்து டுபாய்க்கு ஆறு வெவ்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

(1) மார்ச் 10, 2023 அன்று வெளியேறி, மார்ச் 19, 2023 அன்று திரும்பினார்.

(2) ஏப்ரல் 9, 2023 அன்று வெளியேறி ஏப்ரல் 16, 2023 அன்று திரும்பினார்.

(3) ஏப்ரல் 26 அன்று வெளியேறி, மே 2, 2023 அன்று திரும்பினார்.

(4) மே 5, 2023 அன்று வெளியேறி, மே 7, 2023 அன்று திரும்பினார்.

(5) மே 11, 2023 அன்று வெளியேறி, மே 14, 2023 அன்று திரும்பினார்.

(6) மே 20, 2023 அன்று வெளியேறி, மே 23, 2023 அன்று திரும்பினார்.

டுபாயில் உள்ள ஒரு டீலரிடமிருந்து அவர் வாங்கிய தங்கத்தின் அளவுக்கான ரசீதுகளும் சப்ரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அதில் கைப்பற்றப்பட்ட தொகையின் ஒரு பகுதியும், முன்பு வாங்கியவையும் அடங்கும்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, சப்ரி துபாய்க்கு Flydubai FZ 570 விமானத்தில் புறப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டுபாய்க்கு அவர் ஏழாவது பயணமாக இது அமையும். சப்ரியும் டுபாயில் தனது உத்தியோகபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொழில் செய்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

சுங்கம் சப்ரிக்கு 7.4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது. அது உடனடியாக செலுத்தப்பட்டது. அவர்கள் கண்டறிந்த கடத்தல் பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அபராதம் விதிக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மூத்த அதிகாரி கூறினார். “இந்த சந்தர்ப்பத்தில், சுங்க கட்டளைச் சட்டத்தின் 160 வது பிரிவின் அடிப்படையில் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே, “கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பில் பத்து சதவீதம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது சுங்கச் சட்டத்தின் 129வது பிரிவுக்கு இணங்குவதாக அவர் கூறினார்:

கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள அலி சப்ரி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லீம் தேசியக் கூட்டணியின் (எம்என்ஏ) கீழ் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எனினும், பின்னர் கட்சிக்கும் முதுகில் குத்தி அரசுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.

இலங்கைக்கு தான் கடத்தி வந்த கடத்தல் பொருட்கள் தனக்கு சொந்தமானது அல்ல என்று அலி சப்ரி தனது பாதுகாப்பிற்காக ஊடகங்களின் சில பிரிவுகளிடம் கூறியுள்ளார். ஒரு நண்பர் சார்பாக தான் கொண்டு வருவதாகக் கூறினார். எனினும், நண்பரின் பெயரில் கடத்தல் பொருட்கள் இலங்கைக்கு வரவில்லை. அது அலி சப்ரியின் தனிப்பட்ட பொதிகளில் இருந்தது. இதை சுங்கத்துறையின் அறிக்கையில் தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், உயர் சுங்க அதிகாரிகளின் தகவல்படி, அலிசப்ரி பெரும் பணக்கார கடத்தல் வலையமைப்பில் செயற்படும் ஒரு கடத்தல்காரனாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், அலிசப்ரியின் கடத்தல் தொடர்பில் ஏற்கெனவே சுங்க புலனாய்வு பிரிவு தகவல்களை பெற்றிருந்தது. இம்முறைதான் சோதனை நடத்தியுள்ளது.

-தமிழ் பக்கம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.