ஒரு கிலோ கஞ்சாவை கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜு சுப்பையா என்பவருக்கு சிங்கப்பூரில் இன்று (26) மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனையை "அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு சிங்கப்பூருக்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது.
சமூக ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கூப்பிடம் அவகாசம் கோரினர், அதே நேரத்தில் பிரித்தானிய ஆர்வலர் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் வழக்கு மறுஆய்வுக்கு அழைப்பு விடுப்பவர்களுடன் தனது குரலைச் சேர்த்தார்.
எவ்வாறாயினும், சிங்கப்பூரைச் சேர்ந்த 46 வயதான தங்கராஜூ சுப்பையாவுக்கு, சாங்கி சிறை வளாகத்தில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் தங்கராஜூ சுப்பையா கைதுசெய்யப்பட்டார்.
1,017.9 கிராம் கஞ்சாவை அதாவது சிங்கப்பூரில் மரண தண்டனையளிக்க தேவையான குறைந்தபட்ச அளவை விட இரண்டு மடங்கு கஞ்சாவை கடத்தியதாக தங்கராஜூக்கு 2017 இல் தண்டணை விதிக்கப்பட்டது. அதற்கு எதிரான மேன்முறையீடும் 2018 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றினால் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
தங்கராஜூவின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி சர்வதேசம் குரல் கொடுத்த நிலையில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நேற்று செவ்வாய்கிழமை தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது.
அவருக்கு சொந்தமானது என்று சட்டத்தரணிகள் கூறிய இரண்டு கைபேசி எண்கள் போதைப்பொருள் விநியோகத்தை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
ஆசிய நிதி மையமான சிங்கப்பூர் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் மரண தண்டனையானது கடத்தலுக்கு எதிரான ஒரு சிறந்த தடுப்பாக இருக்கும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகிறது.
தங்கராஜூவின் குடும்பத்தினர் இறுதி நேர மேன்முறையீட்டு மனுவை முன்வைத்து மறுவிசாரணைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
எவ்வாறாயினும், நேற்று, சிங்கப்பூர் நீதிமன்றம் தங்கராஜூ சுப்பையாவின் தண்டனைக்கு எதிராக அவரது குடும்பத்தினரின் கடைசி நிமிட மேன்முறையீட்டை நிராகரித்தது.
சிங்கப்பூர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கடந்த 2022 மார்ச்சில் மரணதண்டனையை மீண்டும் தொடங்கியது= குறிப்பிடத்தக்கது.