கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், தமிழ்மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகக் கலை உள்ளிட்ட சில பாட விடயதானங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையங்களில், இந்தப் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலமான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்தப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில், தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.