பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல சிட்னி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்கவுக்கான பிணை நிற்க முன்வந்திருந்தார்.
மேலும், தினசரி காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும், இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது, முறைப்பாட்டாளருடன் எந்தவிதத்திலும் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் பிணை நிபந்தனையில் நீதிவான் தெரிவித்துள்ளார்.
மேலும், டிண்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை அணுக்கக்கூடாது என்றும் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிக்க இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெனட் வொல்கிஸ்ட் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
அங்கு அவர் பார்க்லியா சிறையிலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த காவல்துறை தரப்பு சட்டத்தரணி கெர்ரி-ஆன் மெக்கின்னன், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பிற்கு தனுஷ்கவினால் அச்சுறுத்தல் நேரலாம் என்று வாதிட்டார்.
இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தால் அவருக்கு எவ்வாறு பிணை கிடைக்கும் என்பதை பரிசீலிப்பதாக நீதிவான் கூறினார்.