மீரிகம, தங்ஹோவிட்ட பிரதேசத்தில் கொள்ளையர்கள் குழுவொன்று மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் பெந்தொட ஹம்புருகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஆவார்.
கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீரிகம – தங்கோவிட்ட சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (02) அதிகாலை இரண்டு மணியளவில் தங்கோவிட்ட பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் கொள்ளையிட சிலர் வந்துள்ளதகா பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தெரியபடுத்தியுள்ளனர்.
அதன்படி, உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ள நிலையில், கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது பொலிஸார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
எனினும், குறித்த வீதியில் பயணித்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, கஹகஸ்திகிலியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தின் பின் இருக்கையில் ஷாமலி இருந்துள்ளார்.
இந்துருவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும் அவர், இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.