உலகளாவிய நெருக்கடிகள், இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் பல நாடுகள் விரைவாக ஆழமடைந்து வரும் கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவை என்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் உடனடி நிவாரணம் இல்லாமல், குறைந்தது 54 நாடுகளில் வறுமை நிலைகள் உயரும், அத்துடன் மிகவும் தேவைப்படும் முதலீடுகள் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வோசிங்டன் மாநாட்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பலமுறை எச்சரித்தபோதிலும், மாற்றங்கள் நிகழவில்லை. மாறாக அபாயங்கள் அதிகரித்து வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, 54 நாடுகளில் 46 நாடுகள் 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 782 பில்லியன் டொலர் பொதுக் கடனுக்கு உள்ளாகியுள்ளன.
அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் வெனிசுலா மட்டும் அந்த தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை, பாகிஸ்தான், துனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உடனடி ஆபத்தில் உள்ள நாடுகள் என்றும் அச்சிம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.