
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகல்ல, களு, களனி, ஜின், நில்வல அல்லது மகாவலி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஆறுகளை படகு சவாரி, குளித்தல் மற்றும் அது தொடர்பான பிற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (யாழ் நியூஸ்)