இன்று (23) பிற்பகல் வீட்டின் முன் முற்றத்தில் துவிச்சக்கரவண்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று மொரகஹஹேன பகுதியில் பதிவாகியுள்ளது.
மொரகஹஹேன, மில்லவ பொல்வத்த பகுதியைச் சேர்ந்த தினிதி சத்சரணி ஜான்ஸ் என்ற சிறுமியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது இரு மாடி வீட்டிற்க்கு முன்னால் உள்ள முற்றத்தில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் முன் வாயிற்கதவும் மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள சிறிய மலையுடன் கூடிய பக்கவாட்டு சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்ததையடுத்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமியின் வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து சிறுமியின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி ஓட்டிச் சென்ற துவிச்சக்கர வண்டியில் மோதியதுடன், சிறுமியுடன் முன்னோக்கி இழுத்துச் சென்று வீட்டின் பின்புறம் நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த சிறுமி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
காரின் சாரதி கைது செய்யப்பட்டு, பின்னர் மதுபான பரிசோதனைக்காக மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டார். (யாழ் நியூஸ்)