கடந்தகால கோவிட் தொற்று காரணமாக பள்ளிவாயில்கள் அனைத்தும் சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமையவும், இதை நடைமுறைப்படுத்தும் வகையிலான வக்பு சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பள்ளிவாயில்கள் சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றி வந்தன.
ஆனால் தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் நாடு இறுக்கமான நடைமுறைகளிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது.
போக்குவரத்துக்கள் அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து விடயங்களும் வழமையான நடைமுறைக்கு திரும்பியுள்ளது.
இதற்கு மேலும் நாட்டில் தற்போது ஆங்காங்கே போராட்டங்கள் ஊர்வலங்கள் என நடைபெறவும் செய்கின்றன.
இதேவேளை பள்ளிவாசல்களில் மாத்திரம் இன்னும் இருக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் சில அசவ்கரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
உதாரணமாக தலைநகரை பொறுத்தவரை முன்னரைப் போல் சில பள்ளிவாசல்கள் லுஹர் வேளையிலே திறக்கப்படுகின்றன. இதனால் ஊர் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பெரும் கஷ்டங்களையும் திருப்திகரமற்ற மனநிலையையும் எதிர்கொள்கின்றனர்.
முன்னைய காலப்பகுதிகளில் தலைநகரில் தொழில் புரியும் மக்கள். காலையில் பள்ளிவாசலுக்குச் சென்று ஸுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றியபின் தமது அன்றாட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் பள்ளிவாசல்களை நாடிச் சென்று, தமது இயற்கையான கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு, காலையில் தொழுகையை முடித்தவர்களாக தமது வேலைகளை தொடங்கி வந்தனர்.
தற்போது கோவிட் தாக்கம் குறைந்த நிலையிலும் நாட்டில் ஏனைய காரியங்கள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையிலும் பள்ளிவாயில்கள் தொடர்ந்தும் இவ்வாறான இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் இன்னல்களை எதிர் கொள்வதோடு, மக்கள் கடைப்பிடித்து வந்த நல்லதொரு பழக்க வழக்கம் மக்களிடமிருந்து மறைந்தும், மக்களை விட்டுப் பிரியும் அளவுக்கு நிலமை மாறியுள்ளது.
மேலும் முஸ்லிம் மக்கள் புனிதமிக்க ரமலான் மாதத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், பொதுவாக ரமலான் மாதங்களில் மக்களின் பெரும் பகுதியிலான காலத்தை பள்ளிவாயில்களில் கழிக்கின்றனர்.
பல வருடங்களாக ஏற்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் புனித மிக்க ரமலான் மாதங்களில் அமல் விடயங்களில் பரிபூரணமான, மன திருப்தியான, ஒரு நிலையை அடைய முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.
பள்ளிவாயில்கள் என்பது முஸ்லிம்களுக்கு ஒரு மத்திய நிலையமாகும். முஸ்லிம் மக்களின் அறிமுகங்கள், நட்புக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் நடைமுறைகள், இன்ப துன்பங்கள் பள்ளிவாயில்களை முதற்கொண்டே ஆரம்பிக்கின்றன. இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பள்ளிவாயில்கள் இருக்கமான நடைமுறைகளை பின்பற்றுவதானது முஸ்லிலிம் சமூகத்திற்கு ஒரு அளவிட முடியாத ஒரு இழப்பை ஏற்படுத்திக் கொண்டிறுக்கின்றது.
எனவே புனித மிக்க ரமலான் மாதத்தை மக்கள் எதிர் கொண்டுள்ளதால், இது சம்பந்தமாக உரிய தரப்பினர் கவனம் செலுத்துவார்களா?
-பேருவளை ஹில்மி