நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) கடனுதவியை தொடர்ந்தும் வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பது கடினமாகும் என்பதால், அதற்கான கடனை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் ரூ. 560 பில்லியன் (US $ 280 மில்லியன்) இரண்டு அரசு வங்கிகளுக்கும் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில், CPC க்கு மேலும் கடன் வழங்குவது இரண்டு வங்கிகளின் வீழ்ச்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால் மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.
எரிபொருள் விற்பனையில் CPC இற்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
மேலும் வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கவும், ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டது.
அதன்படி, வேலை நேரத்தை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மாற்றி அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முன்கூட்டியே வீடுகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, நெருக்கடி மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், ஒரு பெரிய ஊடகப் பிரச்சாரத்தையும் அந்த முன்மொழிவு கோருகிறது. (யாழ் நியூஸ்)