சண்முகா பாடசாலை அதிபர் கூறும் ஒழுக்கமான ஆடை, ஜன்னல் வைத்த ஜாக்கட்டும் இடுப்பு தெரியும் சாரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சண்முகா பாடசாலை அதிபர் கூறும் ஒழுக்கமான ஆடை, ஜன்னல் வைத்த ஜாக்கட்டும் இடுப்பு தெரியும் சாரியுமா?


திருகோணமலை சண்முகா பாடசாலையின் அதிபர் ஊடகங்களின் முன்னிலையில் ஆசிரியை பஹ்மிதா அணிந்த ஆடை ஒழுக்க விழுமியமற்ற ஆடையாக ஹபாயாவை தெரிவித்தார். 

உடலை முழுவதுமாக மூடும் ஹபாயா ஒழுக்கமான ஆடையாக இல்லாது விட்டால் அவர் கூறவரும் ஒழுக்கமான ஆடை ஜன்னல் வைத்த ஜாக்கட்டும் இடுப்பு தெரியும் சாரியுமா அல்லது குட்டை பாவாடையையா? முன்னொரு காலத்தில் அணிந்த சாரியை போன்றில்லாது இப்போது கால ஓட்டத்தில் சந்தையில் உள்ள சாரிகள் மிக கவர்ச்சியாக உள்ளது என பிரபல எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்கள். ஹபாயா ஒழுக்கம் நிறைந்த ஆடையெனவும் ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். 

கல்முனை காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை சண்முகா பாடசாலையின் உள்ளே சென்றால் பெண்பிள்ளைகள் அவர்களின் தலையை மறைத்து அணியும் ஆடையான முக்காட்டை கழற்றிவைத்துவிட்டு செல்லவேண்டும் என்பதாக அறிகின்றோம். அது மனிதாபிமானமற்ற, இனவாத செயற்பாடாகும். அது ஒரு தேசிய பாடசாலை. இலங்கை அரசினால் அப்படியான சட்டம் எந்த பாடசாலையிலும் அமுலில் இல்லை. தொப்பி போடக்கூடாது, தலைமை மூடக்கூடாது என்று சுற்றுநிரூபங்கள் வெளிவந்ததாக எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் போட்டுவைக்கக்கூடாது என்ற நடைமுறைகளை சிலர் கூறியதும், காரைதீவில் வைத்து முஸ்லிங்களின் தொப்பிகளை கழற்றிய வரலாறுகளும் இருக்கிறது. 

ஒரு தமிழ் சகோதரி தன்னுடைய பொட்டை கலைத்தால் எப்படி கூச்சப்பட்டு  கூனிக்குறுகிப்போவாளோ அது போன்றுதான் முஸ்லிம் பெண்ணும் தன்னுடைய ஆடை கலாச்சாரத்தில் கைவைத்தால் கூனிக்குறுகிப்போவாள். கடந்த  நல்லாட்சி காலத்தில் கொழும்பில் சில பாடசாலைகளில் பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிய முடியாத நிலை உருவாகியதை நாங்கள் கண்டோம். இப்படியான நடைமுறைகள் மனிதாபிமானமற்ற இனவாத சிந்தனை கொண்டவை. இதனால் நாட்டுக்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் ஆபத்து உள்ளது. 

எமது உரிமைகள் கிடைக்கவேண்டுமாக இருந்தால் நாம் அடுத்தவர்களின் உரிமையை மதிக்கவேண்டும். சண்முகா பாடசாலையில் நடைபெற்ற விடயம் நிரந்தர பகையானதாக மாறிவிடக்கூடாது என்பதே எங்களின் பிராத்தனையாக இருக்கிறது. முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல. பொத்துவில் பொலிகண்டி ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்களின் சுயரூபம் வெளித்தது. 

எமது நாட்டின் அரசாங்கம் கொரோனா அலையின் பலத்த பின்னடைவின் மத்தியிலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. கடந்த நல்லாட்சி காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த அரசாங்கம் சிறப்பாக உள்ளது. நல்லாட்சி காலத்தில் இனவாதம் தலைதூக்கி சிறுபான்மைக்கு எதிரான அரசாங்கமாக இருந்தது. திருகோணமலை ஷண்முகா பாடசாலை விடயம் ஆரம்பித்த காலத்தில் இனவாதிகளின் கை ஓங்கியிருந்தது. றிசாத், ஹக்கீம், ஹலீம், கபீர் காஸிம், மஹ்ரூப் போன்ற பலரும் அமைச்சர்களாக இருந்தும் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலே இருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிங்கள் யாரும் அமைச்சரவையில் இல்லை. ஆனாலும் அவர்களின் காலத்துடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினருக்கு இந்த அரசாங்கத்தில் பிரச்சினை குறைவாகவே உள்ளது. அவர்களினால் நல்லாட்சி காலத்தில் பூச்சாண்டி காட்டியதை தவிர சமூகத்திற்கு எதையும் சாதிக்க முடியாமலே போனது. 

தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தன் வீட்டில் புரியாணி சாப்பிடும் ஹக்கீம் நினைத்தால் இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியும். நாடுகடந்த டயஸ்போறாக்களின் முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு சமூகத்தை பற்றிய கவலைகள் இல்லை. பதவிகள் மீதும், பணத்தின் மீதுமே பற்றுள்ளது என்றார்.

-நூருல் ஹுதா உமர் 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.