எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கான மின் சக்தி அமைச்சின் கோரிக்கையினை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நிராகரித்துள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (18) மின்சக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் கொள்வனவுக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினையினை தாமும் எதிர்கொண்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இதன்போது சுட்டிக்காட்டியது.
இதேவேளை எதிர்காலத்தில் மின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுமாயின் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகே தெரிவித்தார்.
இதனிடையே களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் சற்று முன்னர் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சாரம் தயாரிக்க எரிபொருள் இல்லாததே இதற்குக் காரணம் ஆகும்.