பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீது கைக்குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிலியந்தலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பனாமுர பிரதேசத்தில் வைத்து மூன்று நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 65 வயதுடைய சந்தேகநபரிடம் நீண்ட நேரம் விசாரணையின் பின்னர் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்தே குறித்த வைத்தியர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வந்த சந்தேகநபர், அதற்கு அருகாமையில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது பாணமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அந்த மருத்துவ நிலையத்தில் பாதுகாவலராக செயற்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஓய்வுபெற்ற வைத்தியரால் சந்தேக நபருக்கு பணமும் வெடிகுண்டும் வழங்கப்பட்டதாகவும், இதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஓய்வுபெற்ற வைத்தியரால் சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வெடிகுண்டு வைக்க முயட்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த வைத்தியரிடம் நீண்ட விசாரணைகள் நடத்தப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)