மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த நியமனம் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், அது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டிருந்தது.
பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனத்தை உடனடியாக வழங்குவது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே எமது செய்தி சேவைக்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும், இந்த ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படாதுள்ளன.
இந்நிலையில், அரசாங்கத்தினால் உடனடியாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.