நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின் நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை, 500 முதல் 600 என்ற அளவில் வைத்துக்கொண்டு, சுகாதார அதிகாரிகள் வெளியிடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
நாளாந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையும், அண்மைய நாட்களில் ஐயாயிரம் அளவில் இருந்தது. எனவே, வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானதல்ல என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற புள்ளிவிபரங்கள் மூலம், நாட்டில் கொவிட் பரவல் அபாயம் இல்லை என்ற எண்ணப்பாடு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களையும், தனிமைப்படுத்தல் விதிகளையும் மீறி செயற்படுகின்றனர்.
எனவே, எதிர்காலத்தில் கொரோனா பரவலின் தீவிரத் தன்மையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஏற்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.