பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 18 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதோடு, அதன்பின்னர் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.
அவரது அடிப்படை உரிமைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் எதிர்ப்பில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா, நீதியரசர்களான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, அஹ்னாப்பிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு வெளியிடமாட்டார் என ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
கவிஞருக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றைய தினம், அஹ்னாபிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு வெளியிடவில்லை எனவும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அஹ்னாப் ஜஸீமின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வருடம் மார்ச் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எஸ்.தேவ். தேவபாலன் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக் ஈஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.மில்லியஸ், ஜனாதிபதி சட்டத்தரணி லக்ஷ்மன் ஜெயகுமார், சஞ்சய வில்சன் ஜயசேகர, ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் சட்டத்தரணி தரிந்து ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.