லிட்ரோ எரிவாயுக் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அது தொடர்பில், சர்வதேச விசேட நிபுணத்துவ நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேஸ் பாவனையில், பொதுமக்கள் வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்று, லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் வழிநடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், கேஸ் கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவங்களுக்கு, எரிவாயுக் கலவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமே காரணமென்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், இதுவரையில் பதிவாகியுள்ள எந்தவொரு சம்பவத்துக்கும், எரிவாயுக் கலவையில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணமென உறுதி செய்யப்படவில்லை என்றும் எரிவாயுவின் தரம் காரணமாக அவ்வாறான சம்பவமொன்று ஏற்பட்டதென உறுதி செய்யப்படுமாயின், ஒருவருக்குத் தலா ஒரு மில்லியன் ரூபாய் அடிப்படையில் காப்புறுதி வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் இணங்கியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
எரிவாயுவின் தரம் தொடர்பிலான SLS தரச் சான்றிதழுடன் கூடிய பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன என்றும் திரவ எரிவாயுக் கலவையானது, பியூட்டேன் 70 சதவீதம் மற்றும் ப்ரோப்பேன் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இன்று முதல் “Propane Max 30% Vol” என்று கேஸ் சிலிண்டரில் அச்சிட்டு வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும், லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்தார்.
எரிவாயு அடுப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் ரெகியூலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள், தரமற்ற வகையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதென்றும் எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதிக்குள், தரமான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அதன்மூலம் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முழுமையானளவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டீ சில்வா தெரிவித்தார்.
எதிர்காலத்தில், அந்த உபகரணங்களின் தரம் தொடர்பான பொறுப்பை, இரு எரிவாயு நிறுவனங்களிடமும் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை உடன் வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ளார் என்றும் அதற்கேற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீர்ப்பரவல்கள் மற்றும் வெடிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் உற்சவக் காலத்தின் போது, அங்கிகாரச் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட எரிவாயு, எந்தவொரு தட்டுப்பாடுமின்றி விநியோகிக்கப்படும் என்றும் கேஸ் தட்டுப்பாடு தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
“கேஸ் கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உரிய நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?” என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள், அரச பகுப்பாய்வாளர்களால் முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
கேஸ் அடுப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தரமற்றவையாக இருத்தல் மற்றும் சரியான முறையில் பயன்படுத்தாமை போன்ற காரணங்களால் இவ்வாறான அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், அச்சம்பவங்கள் எவையும் குற்றம் புரியும் எண்ணத்தோடு மேற்கொள்ளப்பட்டவை என்று விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதனால், வழக்குத் தாக்கல் செய்வதற்கான சரியான காரணங்கள் இல்லையென்றும் குறிப்பிட்டார்.
தரம்வாய்ந்த கேஸ் அடுப்புகள் மற்றும் உபகரணங்களைப் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இதன்போது பொதுமக்களிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.