பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமானது, மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிராத, ஓர் இடத்தில் நடந்த தனிமையான சம்பவம் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா குறிப்பிட்டார்.
எனவே பாகிஸ்தானில் வசிக்கும் ஏனைய இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களோ வீணாக, குறித்த சம்பவத்தை மையப்படுத்தி அச்சம் கொள்ளத் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல் செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இலங்கையர்களாகிய நாம் அறிவுபூர்வமாக நடந்துகொள்ளும் தேசவத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்த இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா நேற்று ( 5) தளதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், மேற்படி விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முப்படைத் தளபதி தொலைபேசியில் என்னுடன் கலந்துரையாடினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போதும் 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு உச்ச பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்நாடு இருப்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்" என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா கூறினார்.
எவ்வாறாயினும் தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.