பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த வேலுப்பிள்ளை கணநாதன் என்பவரே பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக அண்மையில் திருப்பதி சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த விமானம் தொடர்பில் சமூக ஊடகங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்த விமானம் பிரதமரின் நண்பர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் குறித்த வர்த்தகரின் பெயர் தனக்கு தெரியாது என பிரதமரின் தலைமை செயல் அதிகாரி யோஷித ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, குறித்த விமானம் தொடர்பிலும், விமானத்திற்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பிலும் சோலிஷ முன்னிலை கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, பிரதமருக்கு பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உகாண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய கனநாதன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கென்யாவிற்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.
ராஜபக்ச குடும்பத்தின் நண்பராகக் கருதப்படும் கனநாதன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.