ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இணையவழி காணொளி மூலம் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சஹ்ரான் ஹஸீமின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றவர்கள் என்றும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 63 பேரும் பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, திருகோணமலை முதலான சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இணையவழி காணொளி மூலம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.