பசில் ராஜபக்ஷவின் வரவு - செலவு திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை! தினேஷ் குணவர்தன

பசில் ராஜபக்ஷவின் வரவு - செலவு திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை! தினேஷ் குணவர்தன


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள வரவு - செலவு திட்டத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை, யதார்த்தத்தை உண்மையாக அவர் முன்வைத்துள்ளார் எனவும், நாம் கடன் நெருக்கடியில் இருந்தாலும், முறையாக சர்வதேச கடன்களை செலுத்தி வருகின்றோம். இனியும் எந்த நெருக்கடியும் இல்லாது கடன்களை செலுத்துவோம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 


அவர் மேலும் கூறுகையில்,


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முதலாவது வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு கொடுத்துள்ள தீர்வுகளுக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றோம். பொருளாதார ரீதியில் சகல நாடுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 


எனினும் நிதி அமைச்சர் இந்த நாட்டினை மீட்டெடுக்கும் தெளிவான யோசனைகளை முன்வைத்துள்ளார். குறைபாடுகள் இருப்பதாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர், ஆனால் இது குறைபாடுகள் அல்ல, யதார்த்தத்தை உண்மையாக நாட்டுக்கும், இந்த சபைக்கும் தெரிவித்துள்ளார். 


நீண்ட காலமாக இடம்பெற்ற முரண்பாடுகள், தவறுகளை சரிசெய்யும் யோசனைகளே இவையாகும். இந்த திட்டங்களின் மூலமாக எமக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே எம்மால் உரிய இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.


2019 ஆம் ஆண்டு ஆட்சியை எம்மிடம் கையளிக்கும் வேளையில், வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்துடன் நல்லாட்சி நாசமாக்கப்பட்டு மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையில் இந்த நாட்டை நாம் பொறுப்பேற்றோம். இந்த நாசகார செயலுக்கு முழு நாடும் முகங்கொடுக்க நேர்ந்தது, ஈஸ்டர் தாக்குதல் மூலமாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. 


அவ்வாறான நாட்டை பொறுப்பேற்று 2020 ஆம் ஆண்டில் கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும், இன்றுவரை அந்த அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் நாம் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்கின்றோம்.


நாடாக நாம் சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துள்ளது, ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 


ஆனால் நாடு எந்த வழியிலேனும் வீழ்ச்சி கண்டும் அதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றலாம் என எதிர்கட்சியினர் நினைத்துக்கொண்டுள்ளனர். அரசாங்கம் வீழ்ச்சி காண்கின்றது என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே முயற்சிக்கின்றனர்.


அதேபோல் நாம் கடன் நெருக்கடியில் இருந்தாலும், முறையாக சர்வதேச கடன்களை செலுத்தி வருகின்றோம்.  கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நாம் சார்வதேச கடன்களை செலுத்தியுள்ளோம். இனியும் எந்த நெருக்கடியும் இல்லாது கடன்களை செலுத்துவோம்.


மேலும், கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது மாணவர்களுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.


அடுத்த வாரத்தில் இருந்து சகல பாடசாலைகளும் திறக்கப்படும். மாணவர்களுக்கு மீண்டும் கல்வி கற்கும் முழுமையான சூழல் உருவாகும்.


மத்திய வங்கி ஊழல் தான் பொருளாதார ரீதியில்  இத்தனை பிரச்சினைக்கும் பிரதான காரணமாகும், எதிர்க்கட்சியின் மத்திய வங்கி ஆளுநர் மூலமாக முன்னெடுக்கப்பட்ட ஊழல் குறித்து இன்று அவர்கள் மறந்துவிட்டனர். 


இது குறித்து விசாரணைகளை நடத்த அவர் நாட்டுக்கு வரவும் இல்லை, அவர் எந்த நாட்டில் உள்ளார் எனவும் தெரியவில்லை. எமக்கு தெரியாவிட்டலும் கூட எதிர்க்கட்சிக்கு தெரியும் அவர் எங்கு உள்ளாரெனவும் அவர் கூறினார்.


ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.