வாட்ஸாப் ஊடாக பெண்களுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய சந்தேக நபர் சிஐடியினரால் கைது!

வாட்ஸாப் ஊடாக பெண்களுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய சந்தேக நபர் சிஐடியினரால் கைது!


நாடளாவிய ரீதியில் பல பெண்களுக்கு வாட்ஸாப் ஊடாக நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படும், விளம்பர தயாரிப்பு கணினி இயக்குநர் ஒருவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிஐடியின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பல நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 107 சிம் அட்டைகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிம் அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு பெண்களுக்கு இந்த நபர் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக சிஐடியினர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.


சந்தேக நபர், கண்டி பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு வாட்ஸாப் ஊடாக இவ்வாறு  நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்த ஆசிரியை குறித்த இலக்கத்தை முடக்கியுள்ளார்.  பின்னர் பிறிதொரு இலக்கத்திலிருந்து அப்புகைப்படங்களை சந்தேக நபர் அனுப்பியுள்ளர்.


இதனையடுத்து அந்த ஆசிரியை இது தொடர்பில் செய்த முறைப்பாட்டுக்குமைய சிஐடியின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


ஆரம்பக் கட்ட விசாரணைகளின்போது, நிர்வாண புகைப்படம் அனுப்பிய இலக்கம், பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரிய வரவே, கஹவத்தையை சேர்ந்த அப்பெண்ணிடம் சிஐடி விசாரித்துள்ளது.


தன்னிடம் அவ்வாறான இலக்கத்தில் ஒரு சிம் அட்டையே இல்லை என அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அண்மைய நட்களில் தனது அடையாள அட்டையை பிரதிகளை வழங்கிய நபர்கள், பிரதி எடுத்த இடங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர் சிக்கியுள்ளார்.


சந்தேக நபரின் மனைவி ஒரு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தவராவார். அவர் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த அதிகாரி என்பதுடன், பிரதேசத்தில் 5,000 ரூபா நிவாரண தொகை கொடுப்பனவு தொடர்பிலான ஆவணங்களை அவரே கையாண்டுள்ளார்.


அதிலிருந்த அடையாள அட்டை பிரதிகளை மனைவிக்கு தெரியாமல் எடுத்து இந்த சிம் அட்டைகளை கொல்வனவு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.