கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது.


அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது ஆணையை பெரும்பான்மையாக வழங்கியிருந்தார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சிச் சகபாடிகள் வழங்கிய வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான விடயம் விவசாயத்துறை சார்ந்தது.


நாட்டின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் நிறுத்தப்பட்டு இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டும் என்பதாகும். இந்தக் கொள்கையை அமுலாக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி கையிலெடுத்தார்.


எனினும், கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கை பொருளாதாரத்தினை வைத்து அக்கொள்கையை அமுலாக்குவதில் அவருக்கு பெரும் தடைகள் ஏற்பட்டன.


விவசாயிகள் போராட்டங்களை நடத்தினார்கள். ஒரே இரவில் இவ்விதமான கொள்கைகளை அமுலாக்க முடியாது என்று எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.


இவ்விதமான நிலைமையை சமாளிப்பதற்காக ராஜபக்ஷ தரப்பினர் உடனடியாக சீனாவிடம் ஓடிச் சென்றனர். ஏற்கனவே பல்வேறு கடன்களையும், இலங்கையின் கேந்திர நிலையங்களையும் தன்னகப்படுத்தியுள்ள சீனா இந்த விடயத்தினையும் கையிலெடுத்தது.


இலங்கைக்கு தேவையான உரத்தினை வழங்குவதற்கு சம்மதித்து ‘சூட்சுமமாக’ உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டுக்கொண்டது. உடன்படிக்கையின் பிரகாரம், முதற்கட்டமாக உரங்களை இலங்கைக்கு அனுப்பியது.


முதலில் 20 ஆயிரம் மெட்றிக் தொன் சேதன உரத்துடன் சீன நிறுவனம் அனுப்பி வைத்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பலை களுத்துறைக் கடலில் பல வாரங்களாக தரித்து நிற்கச் செய்துள்ளது.


எனினும், குறித்த கப்பலில் உள்ள குயிங்டாவோ சீனாவின் பயோரெக் என்ற சீன நிறுவனத்தின் சேதன உரத்தைக் கொள்முதல் செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துவிட்டது.


அதில் பங்கமளிக்கும் பற்றீரியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் மாதிரிகளைப் பரிசோதித்து விட்டு வெளிப்படையாகவே அறிவித்தும் விட்டது.


ஆனால் குறித்த நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அந் நிறுவனத்தின் சார்பில் களமிறங்கியிருக்கும் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்தின் காரணத்தினைக் கேட்டு விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.


உரத்துடன் வந்த கப்பல் தரித்து நிற்கச் செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் அதனை கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்க தயாரில்லை. இதனால் சினமடைந்த சீனா, மக்கள் வங்கியை ‘கறுப்பு பட்டியலில்’ சேர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்தது.


மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருப்பதாக அறிகின்றோம்.


இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மக்கள் வங்கி நியாயமான காரணத்தினை வெளிப்படுத்தியபோதும் சீனா இசையவே இல்லை.


அதுமன்றி,  இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தின் பரிசோதனைக்கு அமைவாக, குறித்த உரத்தில் ‘எர்வீனியா’ என்ற தீங்கேற்படுத்தும் பற்றீரியா அடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்த பரிசோதனை அறிக்கையை சீனா ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.


மாறாக, மூன்றாவது தரப்பு ஆய்வு கூடத்தில் குறித்த உரத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சீனா வலியுறுத்தியுள்ளது. அனை இலங்கை ஏற்றுக்கொள்வதற்று மறுதலிக்கவும், தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் ஆய்வுகூடப் பரிசோதனை தவறு என்றும், அதனால் சீன நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக 8 பில்லியன் டொலர்களை அளிக்குமாறும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


குறித்த கடிதம் சட்டமா அதிபரின் பரிசோதனைக்காக இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக, உலக உணவுத்திட்டத்திடத்தில் முறையிடப்போவதாக இலங்கை அரசாங்கத்தினை அச்சமூட்டியிருக்கின்றது சீனா.


இதனைவிடவும், இலங்கையில் உள்ள சீன தூதுவர் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து உரத்தினை இலங்கைக்குள் இறக்கிவிட வேண்டும் என்ற  விடயத்தில் மிகத்தீவிரமாக இருக்கின்றார்.


அவர் ஏற்கனவே உரத்தின் தன்மையை நியாயப்படுத்தும் டுவிட்டர் பதிவுகளை செய்தவர் பின்னர் பகிரங்க அறிக்கைகளையும் வெளியிட்டார்.


அதன்பின்னர், கடந்தவாரம் கண்டியில் மகாநாயக்கர்களை சென்று சந்தித்தார். பிரதமர் மஹிந்தரவைச் சந்தித்தார். அதுமட்டுமன்றி உர விடயத்தினை இராஜதந்திர மற்றும் அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் மூன்றாவது தரப்பு பரிசோதனை அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் கூறினார்.


ஆனால், விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, அவ்விதமான எந்தவொரு இணக்கப்பாட்டையும் சீனாவுக்கு தாங்கள் வழங்கவே இல்லை என்று அடித்துக் கூறினார்.


அதேநேரம், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, மூன்றாவது தரப்பு சோதனைக்கு இடமில்லை என பிரதமர் திட்டவட்டமாக சீனத் தூதுவரிடம் தெரிவித்து விட்டார் எனக்கூறினார்.


அதற்கு பிரதமர் மஹிந்தவின் தரப்பினால், அமைச்சர் மகிந்தானந்த தெரிவித்த கருத்துக்களுக்கு நேர் எதிரான பதிலும் கடுமையாக கண்டக் கருத்துக்களும் வெளியாகியிருந்தன.


மறுபக்கத்தில் தேசிய தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மாதிரிகளை மீள்பரிசோதனை செய்ய முடியாது என்கிறார் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அஜந்த டி சில்வா.


இலங்கைக்கென தாவரவியல் தனிமைப்படுத்தல் ஆய்வு கட்டமைப்புகள் உள்ள நிலையில், அதனை மீறி மூன்றாவது தரப்பிடம் சோதனைக்குச் செல்வது பொருத்தமற்றதொரு விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறாயினும், தமது உரத்தில் பற்றீரியாக்களே இருக்காது, என்று கூறிய  சீன நிறுவனத்தின் பொது முகாமையாளரும், தலைமை  தொழில்நுட்ப அதிகாரியுமான அனா சோங், தமது உரத்தில் பற்றீரியாக்கள் உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. ‘எர்வீனியா’ என்ற ஆபத்தான பக்டீரியாக்கள் தான் இல்லை என்றும், மண்ணுக்கு நன்மை தரக் கூடிய பற்றீரியாக்கள் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.


இந்தக் கருத்து மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. ஆகவே தான் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இவ்விடயங்களை கையாண்டு வரும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் பற்றீரியாக்கள் உள்ள உரத்தினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதில் கிடுக்குப்பிடியாக இருக்கின்றனர்.


ஆனால், சீன உர நிறுவத்தினால் நட்ட ஈடு கோரப்பட்ட விடயத்திற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னமும் வெளியாகவில்லை. இவ்வாறான நிலையில், களுத்துறையில் உரக்கப்பலும், சீனத்தூதரகமும் அப்படியே அமைதியாகிவிட்டன.


நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்கத் தேவையில்லை என அறிவித்தால் சீனா பிறிதொரு வழியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி உரத்தினை இறக்குமதி செய்வதற்கே முயற்சிக்கும்.


ஆனால், தற்போது உரத்தினால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் தனியார் உரத்தினை இறக்குமதி செய்ய முடியும் என அனுமதி அளித்துள்ளது. தற்போது தனது இயற்கை உர பாவனை என்ற கொள்கையையும் கைவிட்டுள்ளது.


ஆனால் நாட்டின் தன்னிறைவைப் பூர்த்தி செய்யும் வகையில் உர இறக்குமதி இன்னமும் இடம்பெற்றிருக்கவில்லை. இது உள்நாட்டில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் அபாயத்தினை தோற்றுவித்துள்ளது.


-பெனிற்லஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.