
குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
12 மாத காலத்திற்கு எரிபொருளை வாங்கும் வகையில் 3.6 பில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில , நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.