நாங்கள் அரசுக்கு சார்பான எம்.பிக்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதிலும் இந்த உயரிய சபையில் உறுப்பினர்களாக சிரேஷ்ட அரசியல்வாதிகளான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், கபீர் காஸிம், ரவூப் ஹக்கீம் போன்றோர்களும் முஜிப் ரஹ்மான் போன்றோர்களுக்கும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இல்லாத ஞானமா இவருக்கு வந்துள்ளது. நிதானமாக பேசக்கூடிய தமிழ் தலைமைகளும் இந்த சபையில் இருக்கிறார்கள். இந்த சபையில் எதைப்பேசவேண்டும் எதைப் பேசக்கூடாது என்று தெரியாமல் ஒருவர் மட்டும் காவடி எடுத்து ஆடுவதை அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கு போது, இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழும் சமூகமாக 1000 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. அப்படியான சமூகத்தை நோக்கி ஞானசார தேரர் போன்றோர்கள் இழிசொற்களை பேசிவருவதுடன் அண்மையில் அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் என்று பேசியுள்ளார். இவருக்கு எவ்வகையான நடவடிக்கையை எடுப்பது என்று முஸ்லிம் புத்திஜீவிகளும், மார்க்க அறிஞர்களும், நாங்களும் பேசி பாராளுமன்ற கலறிக்கு பேசாமல் உரிய சட்டநடவடிக்கை எடுக்க முடிவெடுத்து பொலிஸிலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளோம்.
அந்த சட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்த போது பாராளுமன்றத்தில் ஒரு மாற்று சமூக உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் கடுமையாக பேசினார். அவரின் உரைக்கு நாங்கள் தடைபோட்டவர்கள் அல்ல. அவருக்கு அதற்கான உரிமை இருக்கிறது. அவர் அநாகரிகமாக முஸ்லிம் எம்.பிக்கள் ஊருக்கு வந்தால் தாக்குங்கள் என பேசி முஸ்லிங்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கு முயற்சி செய்கிறார். இதனால் முஸ்லிம் சமூகம் கொதிப்பதடைந்துள்ளது. அவர் பொதுவெளியில் பேசமுதலில் முஸ்லிம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். சிங்கள- முஸ்லிம் உறவு ஆயிரம் வருடங்களை விட கூடியது. எம்.சி. அப்துல் ரஹ்மானில் தொடங்கி இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள். கடந்த காலங்களில் 2014 இல் அலுத்கம பிரச்சினையின் போது நாங்கள்தான் போராடினோம், 2001 இல் மாவனெல்லை பிரச்சினை வந்தபோது தலைவர் ஹக்கீம் அமைச்சு பதவிகளை தூக்கி வீசினார். 2019 இல் சஹ்ரானின் பிரச்சினை வந்தபோதும் நானுட்பட சகல முஸ்லிங்களும் அமைச்சுக்களை தூக்கி வீசிவிட்டு சமூகத்தின் நலனுக்காக நின்றோம். முஸ்லிம் எம்.பிக்களான நாங்கள். கண்டி, மினுவான்கொட, திகன, காலி ஜிந்தோட்ட அம்பாறை போன்ற பிரதேசங்களில் பிரச்சினை வந்த போதும் சமூக உரிமைக்காக களத்தில் இறங்கி போராடினோம். அதுமாத்திரமின்றி கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் முஸ்லிங்களை விடுதலை புலிகள் கொன்று குவித்த போது முஸ்லிம் எம்.பிக்களே அதற்கு முகம் கொடுத்தார்கள் என்பது வெளிப்படையான வரலாறு.
விவாக- விவாகரத்து, மாடறுப்பு என முஸ்லிங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் இந்த கால கட்டத்தில் அரசுடன் பேசி தீர்வுகாண முற்படும் போது இளைஞர்களை குழப்பி திசைதிருப்ப முயற்சிக்கிறார் அவர். அவரது பாட்டனாரும், தமிழர் விடுதலை கூட்டணியினரும் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்கி தமிழ் தலைமைகளுக்கு எதிராக போராட வழிகாட்டினார்களோ அதே பாணியில் முஸ்லிம் இளைஞர்களை உசுப்பி விடுகிறார். அப்படி பேச இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. எங்களின் மூச்சி இந்த சமூகத்தின் பால் உள்ளது. ஆனால் இரட்டை வேடம் போட யாரையும் அனுமதிக்க முடியாது.
இங்கு முஸ்லிங்களை பற்றி பேசுபவர் வடகிழக்குக்கு சென்று வடகிழக்கை இணைக்க வேண்டும் என்கிறார். ஆனால் அவருக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பதில் இல்லை. அதே போன்று கல்முனை விவகாரத்தில் எவ்வித முன்னறிவுமின்றி வெறுமனே கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோருகிறார். கல்முனை முஸ்லிங்களின் உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் அவரால் விளங்கமுடியாமல் உள்ளது. கலரிக்கு பேசி முஸ்லிம் இளைஞர்கள் மனதில் நச்சு எண்ணங்களை விதைக்க யாரையும் அனுமதிக்க முடியாது. முஸ்லிங்களின் பூகோள இருப்புகளோ அல்லது முஸ்லிம் சமூக கட்டமைப்புக்களோ தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் 1600 முஸ்லிம் கிராமங்கள் உள்ளது. அதில் வடகிழக்குக்கு வெளியே 900 முஸ்லிம் கிராமங்கள் சிங்கள மக்களுடன் இணைந்ததாக உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் இளைஞர்களை தூண்டி சிங்கள முஸ்லிம் உறவில் விரிசலை உண்டுபண்ண முயறசிக்கிறார். இதனால் அந்த மக்களின் இருப்புக்கள் கேள்விக்குறியாகிறது. இதனை அனுமதிக்க முடியாது
அம்பாறையில் நிறைய காணிப்பிரச்சினை இருக்கிறது. அதை தீர்க்க அம்பாறை அரசாங்க அதிபருடன் கடந்த வாரம் கலந்துரையாடி தீர்வை நோக்கி நகர்கிறோம். 26 வீதம் மட்டக்களப்பில் வாழும் முஸ்லிங்களுக்கு வெறுமனே 01 சதவீத காணிகள் மட்டுமே உள்ளது. அதே போன்று திருகோணமலையில் 44 வீதம் வாழும் முஸ்லிங்களுக்கும் காணிப்பற்றாக்குறை நிலவுகிறது. தோப்பூர் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. குச்சவெளியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத காணிப்பிரச்சினை இருக்கிறது. இவற்றினை யார் பேசுவது ? யாரிடம் பேசுவது என்பதை சிந்திக்க வேண்டும்.
கலரிக்கு பேசி சமூகத்தை உசுப்பிவிட்டு பிரச்சினைக்குள் சமூகத்தை மாட்டிவிட முடியாது. இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களென யாராக இருந்தாலும் முதலில் அவர்களின் வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்காகவே தூய்மையான அரசியலை முன்னெடுக்க முயல்கின்ற போது காட்டிக்கொடுப்பாளர்கள், துரோகிகள் என்ற பட்டங்கள் எல்லாம் கடந்த காலங்களில் தமிழ் அரசியலிலிருந்து தோற்றுப்போனது வரலாறு. அதே போன்று முஸ்லிம் அரசியலிலும் காட்டிக்கொடுப்பு அரசியல் கலாச்சாரத்தை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க யாரையும் அனுமதிக்க முடியாது
கடந்த 04 பாராளுமன்ற தேர்தல்களில் வென்று உறுப்பினராகியது மட்டுமின்றி கல்முனை முதல்வராகவும் இருந்துள்ளேன். எங்களை சமூகத்திலிருந்து ஓரங்கட்ட முடியும் என்றால் அது அவர்களின் பகற்கனவு. அவருக்கு எதிராக பேச இந்த சபையில் யாருமில்லை என்று நினைத்து விடக்கூடாது. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மற்றும் முஜீப் ரஹ்மான் அவர்களே ! நீங்கள் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்தும் பொறுப்பினை வந்தான் வரத்தான்களின் கையில் ஒப்படைக்க விரும்புகிறீர்களா? தயவு செய்து இடமளிக்காதீர்கள். ஏனென்றால் தமிழ் இளைஞர்களையும் இவ்வாறுதான் கடந்த காலங்களில் உசுப்பேற்றிஅந்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிய நேரிட்டது. அவ்வாறான ஒரு ஆபத்து முஸ்லிம் சமூகத்திற்கு வர இடமளிக்க முடியாது என்றார்
-நூருல் ஹுதா உமர்