நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் இனந்தெரியாத போதை மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் வைத்தியர் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாணந்துறை கொரகபொல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வைத்தியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேசத்தின் பெற்றோர்கள் மற்றும் விஹாரதிபதிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்புக் கடமைகளையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நேற்று இரவு 7.30 மணியளவில் பாணந்துறை பள்ளிய முல்ல பகுதியில் இவர் நடத்தி வந்த வைத்திய நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அடையாளம் தெரியாத 2,535 மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 4 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.