அதிபர், ஆசிரியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரச தரப்பினருக்கு இடையில் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள கொடுப்பனவுகள் குறித்த முரண்பாடுகள் தொடர்பில் நீண்ட காலமாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்ற நிலையில் எதிர்கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கூட இது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த வாரங்களில் கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கூட அதிபர் ஆசிரியர் சம்பள கொடுப்பனவுகள் குறித்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைமைகள் சபையில் வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை அபயாராம விகாரையில் சர்வ கட்சிகளின் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைத்து இந்த விடயங்கள் குறித்து தேரர்களிடம் வலியுறுத்தியிருந்த நிலையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட சங்கைக்குரிய தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சர்களுடன் இது குறித்து பேசி தீர்மானம் ஒன்றுக்கு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில், கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சரவை உபகுழு உறுப்பினர்கள் கூடி ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியிருந்த போதிலும் நாளை காலையில் முன்னெடுக்கவிருந்த பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கான அடுத்த திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்கவிடம் வினவிய போது அவர் கூறுகையில்,
ஆசிரியர் சங்க பிரச்சினைகள் குறித்து எமது நீண்டகால கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் நாளைய தினம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரம் ஒதுக்கிக்கொடுத்திருந்தார். பிரதமருடன் கல்வி அமைச்சர், மற்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள கொடுப்பனவுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவுடன் இந்த பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாளை காலை அரச தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி மூவாயிரத்திற்கு அண்ணளவான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் எந்த சிக்கலும் இல்லாது எம்மாலும் செயற்பட முடியும்.அவ்வாறு இல்லை என்றால், எமக்கு தீர்வு கிடைக்காது போனால் இந்த பிரச்சினைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும், போரட்டங்களும் தொடரும் என்றார்.
-ஆர்.யசி