நான் ஒருபோதும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் சிந்தனை உடையவர்கள் என்று கூறவில்லை; நான் அவர்களை அதிகம் நேசிக்கக்கூடியவன்! -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் ஒருபோதும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் சிந்தனை உடையவர்கள் என்று கூறவில்லை; நான் அவர்களை அதிகம் நேசிக்கக்கூடியவன்! -சரத் வீரசேகர


ஐ.எஸ் மத தீவிரவாத சிந்தனைகள் ஆபத்தானவை. அவ்வாறான சிந்தனையுள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள். அவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க  முடியும்’ என்றுதான் நான் தெரிவித்தேன்


‘ஐ.எஸ் மத தீவிரவாத சிந்தனைகள் ஆபத்தானவை. அவ்வாறான சிந்தனையுள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள். அவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்கமுடியும்’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


தினகரன் பத்திரிகைக்காக வழங்கிய பேட்டியொன்றிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.


‘முஸ்லிம்கள் அனைவரிடத்திலும் ஐ.எஸ் மத தீவிரவாத சிந்தனை காணப்படுவதாகவும், அச்சிந்தனை என்றோ ஒருநாள் வெடிக்கலாம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியதாக சில ஊடகங்கள், இணைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.


இவ்வாறான செய்தி தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வினவிய போதே அவர் தினகரனுக்கு தனது விளக்கத்தைத் தெரிவித்தார்.


“நான் இவ்வாறு கூறியதாக சில ஊடகங்கள் வெளியிட்ட மேற்குறித்த கருத்தானது முற்றிலும் தவறானது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்.


‘ஞானசார தேரர் கூறிய இன்னுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என்னும் விடயத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்கின்ற வகையில் அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? அதற்கு எவ்வகையான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளீர்கள்? அத்துடன் அதுபற்றி ஞானசார தேரரிடம் விசாரிக்கவில்லையா?’ என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் வினவியிருந்தார்.


நான் அதற்குப் பதிலளிக்கையில், ஞானசார தேரரிடம் பொலிஸ் வாக்குமூலத்தினை பெற்றுள்ளது என்றும், அவர் கூறிய விடயங்கள் சிலதையும் அங்கு சுட்டிக் காட்டியுமிருந்தேன்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெளிவுபடுத்தினார்.


தினகரனுக்காக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்ததாவது:


“அதனைத் தொடர்ந்து நான் கூறிய விடயம், ஐ.எஸ்.மத தீவிரப்போக்கு உள்ள ஒருவரால் தேவையான நேரத்தில் தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்றே ஆகும். உதாரணமாக நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியிலுள்ள தீவிரவாதியை நீதிமன்றம் விடுவிப்புச் செய்தது. அவர் பற்றி கணனியில் இருந்த தகவல் வேறு, ஆனால் அவருடைய மூளையில் இருந்த சிந்தனை வேறு. குறித்த சிந்தனை அந்த நிமிடம் வரை மூளையில் இருந்து அழிக்கப்படவில்லை. அதனால்தான் அந்த தாக்குதல் இடம்பெற்றது.


அதேபோல் நமது நாட்டிலும் சில நேரம் ஐ.எஸ்.சிந்தனையுடையவர்கள் இருக்கக் கூடும். அவ்வாறான இளைஞர்கள் சமூகத்திற்குள் மறைந்திருக்கவும் கூடும். இன்னும் ஆழமாக கூறப் போனால் ஏப்ரல் - 21 தாக்குதல்தாரிகளான வர்த்தகர் இப்றாஹிமுடைய மகன்கள் இருவருமே ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறியிருந்தனர்.


குறித்த இருவரும் இளைஞர்கள். ஐரோப்பிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள். செல்வந்த குடும்பத்தவர்கள். அவ்வாறான இளைஞர்களே இப்படியொரு சிந்தனைக்குள் அக்கப்பட்டுள்ளனர் என்றால் (மரணித்த பின்னர் சுவர்க்கத்தினை அடைய முடியும், கன்னியர்களை அடைந்து கொள்ள முடியும் என்கின்ற சிந்தனையூட்டல்களால் கவரப்பட்டுள்ளார்கள்) சாதாரணமான முஸ்லிம் இளைஞர்களிடமும் இப்படியான சிந்தனைக்குள் இலகுவாக அகப்பட முடியும்.


நான் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மானிடம் கூறியது ஐ.எஸ்.மதவாத சிந்தனை உள்ளவர்களை அடையாளப்படுத்துமாறே ஆகும். ஜனாதிபதி இவ்வாறான சிந்தனை உள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் புதிய சரத்தினை கெண்டு வரவுள்ளார்.


இப்போது நமக்குத் தேவை ஐ.எஸ். மத தீவிரவாதத்தினை களைவதேயாகும். அது சிலநேரம் உங்களிடமோ அல்லது என்னிடமோ இருக்கலாம், அதனைக் கண்டு கொள்ள முடியாது. அது மூளையுடன் தொடர்புபட்டது. அப்படியான ஒருவர் நாளை வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த முடியும்.


நாம் மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் அது தொடர்பில் விழிப்புடன் இருத்தல் அவசியம். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் உட்பட ஏனையவர்களும் இதற்கு உதவி புரிதல் அவசியம். அப்படியான மத சிந்தனை உள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள் என்றுதான் கூறினேன்.


நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 'முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிர சிந்தனையுள்ளவர்கள்' என்று கூறவில்லை. எங்களைச் சுற்றி இப்படியான சிந்தனையுள்ளவர்கள் இருக்க முடியும் என்றுதான் கூறினேன். அவர்களால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் நியூசிலாந்து உட்பட ஏனைய நாடுகளில் நடத்தப்ட்ட தாக்குதல்கள் போன்று தாக்குதல் நடத்த முடியும்.


அதன் பின்னர் அவர்களை மரணிக்கச் செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லையே. அவ்வாறான சி;ந்தனையுள்ளவர்களை அடையாளம் காட்டினால் அவ்விளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க முடியும் என்றுதான் கூறினேன். இதுதான் ஜனாதிபதியின் சிந்தனையில் உள்ளது. இதனை திரிபுபடுத்தி எவராவது கூறினால் அது தவாறானது மட்டுமல்ல, மிகப் பிழையானதுமாகும்.


நான் முஸ்லிம் மக்களை அதிகம் நேசிப்பவன், கௌரவப்படுத்துபவன். இன்று வரை நிறைய முஸ்லிம் நண்பர்கள் எனக்கு உள்ளனர். அவர்கள் பின்பற்றும் மதத்தினை நான் கௌரவப்படுத்துபவன். நான் அம்பாறை மாவட்டத்தில் இருந்த போது மௌலவிமார்களுக்கு தொழில்களை வழங்கினேன். எனது சக்திக்கு உட்பட்டு பள்ளிவாசல்களுக்கு உதவியிருந்தேன். மௌலவிமார்களை அரச சம்பளத்துடன் பள்ளிகளில் கடமையாற்றுவதற்கு பணித்திருந்தேன். அம்பாறை மாவட்டத்தில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்தப் பணியை செய்திருக்கவில்லை.


நான் ஒரு சிறந்த பௌத்தனாக இருந்தால் ஏனைய மதங்களை கௌரவப்படுத்துதல் வேண்டும். அதுதான் எனது சிந்தனையும். நான் அப்படி ஒரு வசனத்தைக் கூட முஸ்லிம் மக்களுக்குக் கூறவில்லை. தயவு செய்து நான் அவ்வாறு கூறுவேன் என்றும் நினைக்க வேண்டாம். ஐ. எஸ். மத தீவிரவாத சிந்தனை மிகப் பாரதூரமான சிந்தனை. தேவையான நேரங்களில் அது வெளிப்படுத்தப்பட முடியும். அப்படியான சிந்தனையுள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள் என்று தான் கூறினேன்.”


இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தினகரனுக்கான பேட்டியில் குறிப்பிட்டார்.


-றிசாத் ஏ. காதர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.