ஆப்கானில் வகுப்பின் நடுவே திரை; மாணவிகளுக்கு ஹிஜாப் கட்டாயம்! பல்கலைக்கழகங்கள் திறப்பு!

ஆப்கானில் வகுப்பின் நடுவே திரை; மாணவிகளுக்கு ஹிஜாப் கட்டாயம்! பல்கலைக்கழகங்கள் திறப்பு!


தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வகுப்பின் நடுவே திரை கட்டி மாணவர்கள் ஒருபுறம் மாணவிகள் ஒருபுறம் எனப் பிரித்து அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது.


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர். 


இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.


இதனால், ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால், இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. மீறுவோர் மிக மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


ஆனால், 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நுழைந்த பின்னர் தலிபான்களின் ஆதிக்கம் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் ஆதிக்கம் இல்லாத ஆப்கானில் பெண் கல்வி பெருமளவில் உயர்ந்தது. பெண்கள் சினிமா துறையில் பளிச்சிட்டனர். அதுபோல் பாப் ஸ்டார்களும் உருவாகினர். இப்படியிருக்க கடந்த 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. ஆனால், தலிபான்கள் தாமாகவே முன்வந்து இம்முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். பெண்கள் கல்வி கற்க அனுமதித்திருந்தாலும் கூட பல்வேறு சட்டதிட்டங்களை விதித்துள்ளனர்.


பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே மாணவர்கள் வெளியேற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கண்களைத் தவிர முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.