புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியானது!

புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியானது!


தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

அத்துடன், ஒன்று கூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதன்போது 10 பேருக்கு மாத்திரம் குறித்த திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த சுகாதார வழிகாட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், 16ஆம் திகதிக்கு பிறகு மரண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரே சந்தர்ப்பத்தில் 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

சமய ஸ்தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அனுமதிக்கப்பட மாட்டாது.

பொதுப் போக்குவரத்தின்போது ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், அதிசொகுசு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வளி சீராக்கலை இயக்குவதை தவிர்த்து ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும்.

பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.