ஊடக உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

ஊடக உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!


யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி கடந்த வெள்ளிக்கிழமையன்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


நிகழ்நிலைத் தொழில்நுட்பம் வழியாக நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகக் கற்கைகள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


பல்கலைக்கழகம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடைமைகளில் ஒன்றாக, துறைசார் ஆர்வமிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகத் தவறிய மாணவர்களுக்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி மூலம் உரிய தகைமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவதாக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார். 


இரண்டு வருட பகுதிநேரக் கற்கையாக ஆரம்பிக்கப்படும் உயர் டிப்ளோமா கற்கைநெறி துறைசார் விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் ஆகியோரின் கல்விசார் பங்களிப்புடன் சுயநிதிக் கற்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது.


யாழ். பல்கலைக்கழகம் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் வழியாக ஊடகவியலாளர்களுக்காக சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட இதழியல் டிப்ளோமா கற்கைநெறியினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத் துறைசார் முன்னெடுப்புடன் இந்த  ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.