ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3 பேர் கீழே விழுந்து பலி!

ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3 பேர் கீழே விழுந்து பலி!

காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என பலர் முண்டியடிக்கின்றனர். இதற்காக உயிரைப் பயணம் வைக்கின்றனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது ஏறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதேபோல் அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏற இடம் கிடைக்காததால் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் 3 பேர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.