மக்தப் வகுப்புகளில் ஏற்படவிருக்கும் மாற்றம்!

மக்தப் வகுப்புகளில் ஏற்படவிருக்கும் மாற்றம்!

மக்தப்களை வக்பு சபையின் கீழ் கொண்டு வருதல் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவும் இலங்கை வக்பு சபையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடத் தீர்மாணித்துள்ளன. நேற்று (02) ஸூம் செயலியினூடாக நடந்த கலந்துரையாடலில் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நகல் கலந்துரையாடப்பட்டதோடு உடன்பாடுகளும் எட்டப்பட்டன. இந்த அடிப்படையில், இன்ஷா அல்லாஹ், அடுத்த வாரம் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

இன்றைப கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பிரதம நிர்வாக அதிகாரி உட்பட பல உலமாக்கள் கலந்து கொண்டனர்; வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், உட்பட பல உத்தியாகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அல்குர்ஆன் மத்ரசாக்கள் இஸ்லாமிய சின்னங்களில் ஒன்றாகும். முஸ்லிம் சிறார்களுக்கு புனித அல்ஆனை ஒதக் கற்றுக் கொடுத்து சிறுவயது முதல் அறநெறிப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கி அவர்களை நல்லொழுக்க சீலர்களாகவும் இந்நாட்டின் நற்பிரஜைகளாகவும் உருவாக்குவதற்கான அடிப்படை வழிகாட்டல்கள் அங்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் நாளாந்தம் அல்குர்ஆனை ஓதி ஐவேளைத் தொழதாக வேண்டும். எனவே அல்குர்ஆனைக் கற்பதும் அடிப்படை மார்க்க விவகாரங்களை அறிந்துகொள்வதும் ஒரு முஸ்லிமின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி. வஸல்லம் அவர்களது காலம் முதல் வரலாறு முழுவதிலும்; உலக வாழ் முஸ்லிம்கள் முஸ்லிம் சிறார்களுக்கான அல்குர்ஆன் மத்ரசாக்களை உருவாக்கி அதனைப் பேணிப் பாதுகாத்து வருவதை மிகப் பெரும் வணக்கமாகக் கருதி செய்து வருகின்றனர். இலங்கையிலும் எமது முன்னோர்கள் இதனைக் கட்டிவளர்த்துப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். கலாநிதி நுஃமான் அவர்களது ஆய்வுற்கேற்ப இத்தகைய மத்ரஸாக்கள் 5000 க்கு மேல் 1800 களில் இலங்கையில் இருந்துள்ளன.

என்றாலும் காலப்போகில் பள்ளிவாயல்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தாததன் காரணமாக, சிறார்கள் அறநெறி வாழ்வில் சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2011 ஆம் ஆண்டு முதல் குர்ஆன் மத்ரசா புனரமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து " மக்தப் " என்ற பெயரில் சிறப்பாக நடாத்தி வருகின்றது. ஜம்இய்யா நடாத்தி வரும் இத்திட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களினூடாக 110 ,000க்கும் அதிகமான சிறார்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பன்முக சமூகங்கள் வாழும் இலங்கை நாட்டில் சிறந்த தலைமுறையினரைக் கட்டியெழுப்ப சிறார்களுக்கான இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகள் எனும் திட்டத்தை வக்பு சபை முன்வைத்துள்ளது. இதனைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யத்துல் உலமா மக்தப் புனரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டு மக்தப் புனரமைப்புத் திட்டதில் இணைந்து பயன்பெற்று வரும் சிறார்கள் அனைவரையும் வக்பு சபையின் “இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகள்” திட்டத்துக்குள் முற்று முழுதாக உள்வாங்குவதைக் கவனத்திற்கொண்டது. 2020 மார்ச் மாதம் முதல் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் வக்பு சபையும் ஜம்இய்யாவும் பல்வேறு கலந்துரையாடல்களை நடாத்தின. இறுதியில் இரு நிறுவனமும் தங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் பேணப்படும் காலமெல்லாம் ஜம்இய்யா வக்பு சபையின் அறநெறிப் பாடசாலைகள் திட்டத்துக்கு தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.