ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இன்று(27) வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி!
advertise here on top
advertise here on top

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இன்று(27) வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி!

கேள்வி
:நீங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நுழைந்தீர்கள் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு பிரதமர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கீழ் பணிபுரிந்தீர்கள். பாராளுமன்ற உறுப்பின்களின் தரத்தை அன்றுடன் இப்போது ஒப்பிடும் போது எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:நான் 1988 இல் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தேன். அதற்கு முன்பே எனக்கு அரசியலில் ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. நான் பாடசாலையில் படித்த காலத்திலிருந்தும், டட்லி சேனநாயக்க ஐ.தே.க தலைவராக இருந்த காலத்திலிருந்தும் எங்கள் கட்சியில் ஒரு மாணவர் இயக்கத்தைத் தொடங்க நான் முன்முயற்சி எடுத்தேன்.பின்னர் நான் ஐ.தே.க யின் இளைஞர் முன்னணியின் செயலாளராகவும், பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் ஆனேன், அரசியலில் சில அனுபவங்களை சேகரித்தேன். நான் 8 ஆம் வகுப்பில் இருந்தபோது என் குடும்பத்தில் ஒரு அரசியல் பின்னணி இருந்ததால், நான் பாராளுமன்ற கேலரியைப் பார்வையிட்டு விவாதங்களைப் பின்பற்றினேன். அப்போதைய மற்றும் இப்போதைய பாராளுமன்றத்தைப் பார்க்கும்போது, ​​ஒரு வகையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பாராளுமன்றம் அப்போது ஆழமான பெருமதிகளைக் கொண்டிருந்தது. அது மரியாதைக்குரிய இடமாக இருந்தது. பாராளுமன்றம் கொள்கை ரீதியான அரசியல் நிரம்பப் பெற்ற இடமாக இருந்தது. அது படித்தவர்களால் நிறைந்த இடமாக காணப்பட்டது.வெவ்வேறு அரசியல் கருத்துக்களும் கொள்கைகளும் இருக்கலாம், ஆனால் அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மரியாதை இருந்தது.வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்பட்டபோது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, பெர்னார்ட் சொய்சா தான் உரையை ஆரம்பித்தார். டட்லி சேனநாயக்க எப்படி சொய்சாவின் பேச்சை முகத்தில் கையை வைத்த வன்னம் உன்னிப்பாக கேட்டார் என்பதை என்னால் இன்னும் நினைவில் கொள்ள முடிந்தது. என் தந்தை கூட பெர்னார்ட் சொய்சாவின் பேச்சை தவறவிட்டதில்லை. ஒருவருக்கொருவர் மதிக்கும் அரசியல் அது. நான் கேலரியில் அமர்ந்திருந்தபோது, தேர்தலில் தோல்வியடைந்த ரொபர்ட் குணவர்தனையும் பேச்சைக் கேட்க வந்திருந்ததை என்னால் நினைவில் கொள்ள முடிந்தது​​. அது இடதுசாரி அல்லது வலதுசாரி அல்லது தாராளவாத அல்லது பழமைவாதமான கொள்கையாக இருந்தாலும், அவர்களிடம் என்ன கருத்துக்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொண்டனர். பாராளுமன்றம் சமுதாயத்தின் பன்முக பக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் செய்யும் உரைகளை நீங்கள் கேட்கும்போது எனக்கு எந்த ஆழமும் இல்லாத உரைகள் போன்று தோன்றுகிறது.அவர்களில் பெரும்பாலோர் அரசியல் ஆதாயம் பெறும் விதமாக உரைகளை ஆற்றுகின்றனர். இந்த நடத்தை மிகவும் வருத்தமாக உள்ளது. எங்கள் பாராளுமன்றத்தில் படித்தவர்கள் இல்லை என்று நாங்கள் கூறும்போது, ​​இந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது சமூகம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மக்கள் முடிவெடுப்பார்கள். உண்மையை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. ஊடக நிறுவனங்கள் தங்கள் பத்திரிகை நிறுவனங்களை அரசாங்கமும் மற்றவர்களும் கையகப்படுத்தியதாகக் கூறி தங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு, சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பெறுவதற்காக பொறுப்புகளை புறக்கணித்தால், ஊடகங்கள் தலைவர்களின் மடிக்குச் சென்றால், மக்களைச் சென்றடைவது பயனற்ற தகவல்களே. அவ்வாறானால் தவறான தகவல்களின் அடிப்படையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே மக்களுக்கு துல்லியமான மற்றும் உண்மையுள்ள தகவல்களை வழங்குவதில் ஊடகங்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. கோர்டன் பிரவுன் மற்றும் டோனி பிளேயர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் நான் சமீபத்தய ஒரு எடுத்துக்காட்டை உதாரணமாக எடுத்தேன், ஜோர்ஜ் புஷ் வழங்கிய துல்லியமான தகவல்களை அவர்கள் பெறாததால் அவர்கள் ஈராக்கிற்கு எதிரான போரில் இணைந்ததாக அவர்கள் கூறினர். அவர்கள் சொன்னார்கள் “ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அதற்காக வருந்துகிறோம்” என்று கூறியிருந்தனர்.ஆனால் அவர்கள் வருத்தப்படத் தொடங்கிய நேரத்தில், எண்ணெய் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமல்ல, பலர் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான பாபிலோனிய நாகரிகம் இதனால் அழிக்கப்பட்டது. இவை நமக்கு படிப்பினைகளாகும். எனவே இந்த நேரத்தில் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:இந்தப் பின்னணியில் படித்த இளைய தலைமுறையை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது எந்தளவு முக்கியம்?

பதில்:இது மிகவும் முக்கியம். இளைய தலைமுறை சூடான இரத்தம் போன்றும் வேட்கை கொண்டவர்கள். அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. தற்போதைய இளைய தலைமுறை அறிவோடு மேம்பட்டுள்ளனர். உலகம் இப்போது ஒரு உலகளாவிய கிராமம். இது உலகளாவிய பொருளாதாரம். இளைய தலைமுறையினருக்கு பாராளுமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். சமீபத்திய மக்கள் தொகை புள்ளிவிவரங்களின் படி, நமது மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி இளைஞர்களாகும் என்பதோடு 50 சதவிகிதம் பெண்களாகும். ஆனால் நமது பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் என்ன? 30 வயதிற்குட்பட்டவர்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அவர்களில் 1.7 சதவீதம் பேர் மட்டுமே பாராளுமன்றத்தில் பெற்றிருக்கிறோம். 35 வயதுக்குக் கீழே 4.4 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளோம். இந்த புள்ளிவிவரங்கள் குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். பெண்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலாளர்கள், ஊனமுற்றோர், வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றம் சமூகத்தின் சகல தரப்பையும் உள்ளீர்த்தாக இருக்க வேண்டும். இல்லையெனில் இளைஞர்கள் கிளர்ச்சி செய்வார்கள். இதை 1971 இல் பார்த்தோம், 1980 களிலும் பார்த்தோம். வடக்கிலும் தெற்கிலும் இதை பார்த்தோம். ஜனாதிபதி பிரேமதாச ஒரு இளைஞர் ஆணைக்குழுவை நியமித்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன், அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அதில் கலந்து கொண்டு அந்த ஆணைக்குழு அமர்வுகளை செவியேற்றார். அவர் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை கேட்டார். இதில் பேராசிரியர் ஜயதிலக, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் ராதிகா குமாரசாமி ஆகியோர் அடங்குவர். அவர்கள் கொடுப்பனவுகளை கூட எடுக்கவில்லை. அவர்கள் மூன்று மாதங்களில் ஒரு அறிக்கையைத் தயாரித்தனர், நான்கு கண்டுபிடிப்புகள் அதில் இருந்தன. தற்போதுள்ள அமைப்பு இளைஞர்களை இந்த ஆட்சி முறைமைகளிலிருந்து விலக்கிவிட்டது என்று அவர்கள் முடிவு செய்தனர். இரண்டாவது கண்டுபிடிப்பு என்னவென்றால், பாராளுமன்ற அமைப்பு மற்றும் அரசியல் நடத்தை மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழந்துவிட்டனர் என்பதாகும். மூன்றாவது, அரசாங்க சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகளில் அரசியல் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும். நான்காவது, தற்போதுள்ள ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்துள்ளன என்பதாகும். இந்த சவால்களை நாங்கள் இன்னும் எதிர்கொள்கிறோம். நாம் இன்னும் அவற்றை வெற்றி கொள்ளவில்லை. ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், 20 ஆவது திருத்தத்தைப் பாருங்கள். நாங்கள் என்ன செய்தோம்? கடந்த காலத்திலிருந்து நாங்கள் ஒருபோதும் பாடம் கற்கவில்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை, நீதித்துறையின் சுதந்திரம் இல்லை, நாங்கள் ஒரு நபரை மையமாகக் கொண்டு அதிகாரத்தை வழங்குகிறோம், நீதிபதிகளை நியமிப்பதற்கு, நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து முடிவு செய்வதற்கு, பொலிஸ் சேவையில் மொத்த அதிகாரம் கொண்ட பொலிஸ் ஆணைக்குழுவை நியமிப்பதற்கு,பகிரங்க சேவை ஆணைக்குழுவை நியமிப்பதற்கு என்பனவாக. நாம் எங்கு செல்கிறோம்? 1980 களில் நடைபெற்ற இளைஞர் ஆணைக்குழுவின் பரிந்தரைகளிலிருந்து நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு குடும்பத்தின் இருப்புக்காக நாம் அதைக் சுருக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும், நாம் பரந்த விதமாக சிந்திக்க வேண்டும்.

கேள்வி:ஆனால் அந்தப் பரிந்துரைகளை நெருக்கமாகப் பின்பற்றிய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1989 இல் இளைஞர்களின் எழுச்சியை மறந்து வன்முறையில் நசுக்கினார் அல்லவா?

பதில்:நாம் எல்லா தரப்பிலும் நியாயமாக இருக்க வேண்டும். நான் எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்யப் போகும் போது லூசியன் டைட்டஸ் என்ற இளைஞரை எனது தனியார் செயலாளராக நியமித்தேன். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லப்பட்டார். பின்னர் நான் ஆனந்த விமலவீரவை பரிந்துரைத்தேன்,அவரும் கொல்லப்பட்டார். எனக்கு வாக்களிக்கச் சென்ற இளம்பெண்கள் துன்புறுத்தப்பட்டு தலையை மொட்டையடித்துக்கொண்டனர். தொழிற்சங்கத் தலைவரான ஜோதிபால முனசிங்க மற்றும் அவரது மனைவி நந்தா முனசிங்க என்ற ஆசிரியரும் கொல்லப்பட்டனர். இறுதி ஊர்வலத்தில் நாங்கள் கலந்துகொண்டபோது சவப்பெட்டியை முழங்கால்களுக்கு மேலே உயர்த்த வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கிராம மக்கள் அஞ்சினர். நானும் என் தந்தையும் மற்றவர்களுடன் இறுதி சடங்கில் கலந்து கொண்டோம். அது போன்ற ஒரு பயங்கரமான சகாப்தத்தில் நாங்கள் வாழ்ந்தோம். ஒரு சிட் வழங்கப்பட்டபோது கடைகளை மூட வேண்டியிருந்தது. அரசியலில் ஈடுபட்டவர்கள் இராஜினாமா செய்யச் சொல்லப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியைப் பிடித்தபோது, ​​மூடிய கண்களுடன் எந்த காட்டுக்கும் வரத் தயாராக இருப்பதாகவும், இந்த பிரச்சினையை கொலைகளால் அன்றி கலந்துரையாடலால் தீர்ப்போம் என்றும் வெளிப்படையாகக் கூறினார். ஜனநாயகம் ஆபத்தில் இருந்தது. ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் ஒரு சமூகத்திற்கு எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை. சமூகம் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் இருந்தன,ஜனாதிபதி பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கு எந்த பதிலும் இல்லாதபோது, ​​ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த அவர் இராணுவத்திடம் விடயங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது. ஒருவருக்கொருவர் விரல் நீட்ட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், சமூகத்தின் ஜனநாயக உரிமைகளை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். கட்சிகளுக் இடையேயான ஜனநாயகத்தையும் கட்சிக்கு வெளியேயான ஜனநாயகத்தையும் நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்திற்கான இடம் குறைக்கப்படும்போது அது அடக்குமுறைக்கு வழிவகுக்கும்.

கேள்வி:கடந்த காலங்களில் நடந்த வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைப் பற்றி பேசினோம். இந்த வன்முறை அடக்குமுறை கருத்து வேறுபாடுகளின் குரல்களைக் கட்டுப்படுத்தவும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்யும் விடயங்கள் இன்றும் தொடர்கிறது. இந்தத் தீய வட்டம் மீண்டும் மீண்டும் இடம் பெறுகிறது இல்லையா?

பதில்:நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்திற்கு செல்வதற்கான அறிகுறியாகும். நாம் சரியானதைச் செய்கிறோம் என்றால், நம்முடைய தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது எம்மால் பொறுமையாக இருக்க முடியும் என்றால் அடக்குமுறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அது தோல்வியுற்றதால் அரசாங்கம் அடக்குமுறையை ஏற்றுக்கொள்கிறது. எனது அரசியல் வாழ்க்கையின் போது, ​​இரண்டு வருடங்களுக்குள் ஒரு குறுகிய காலத்திற்குள் மூழ்கும் கப்பலை ஒத்த ஒரு அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த அரசாங்கம் மூழ்கியுள்ளது. அந்த தோல்வி இரண்டு ஆண்டுகளுக்குள் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரை அரசாங்கம் கொண்டு வருவதால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இரண்டு பதவிகளுக்கு செல்லலாம். அவர்கள் ஒரு புதிய முகத்தைக் கொண்ட ஜனாதிபதியை மாற்ற விரும்புகிறார்கள்,ஒரு புதிய மீட்பவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தோல்வி மற்றும் இயலாமையை நிரூபிக்கிறது. ஒரு கப்பல் மூழ்கப் போகும்போது உள்ளே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தச் சண்டை அரசாங்கத்திற்குள் தொடங்கியுள்ளது. அரசியல் வரலாற்றில் நாம் கண்டதை இப்போது காண்கிறோம்.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.