உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று கிராமங்கள் முடக்கம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று கிராமங்கள் முடக்கம்!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவசர கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொரோனா தொற்றினால் ஒரு மரணமும் இடம்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறித்த பகுதி மக்கள் தனிமைப்படுத்தலினை மீறாது வீடுகளில் இருந்து கொள்ளுமாறும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, கும்புறுமூலை இராணுவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை கிடைக்கப்பட்டதன் பிரகாரம் 29 தொற்றாளர்கள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.