அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவாரா ? வெளியான நம்பகரமான செய்தி!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவாரா ? வெளியான நம்பகரமான செய்தி!

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான அமைச்சர் நாமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச அதில் போட்டியிடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சபாநாயகரும், இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு இடையிலான ரகசிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரஹானை இல்லத்தில் இந்தச் சந்திப்பு இரவில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, அடுத்த ஜனாதிபதி தேர்தல் அல்லது 2030 ஆம் ஆண்டில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்சவை அல்லது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது பற்றி இந்தச் சந்திப்பில் கூடுதலாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பஸில் ராஜபக்சவை போட்டியிட வைப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு ராஜபக்ச குடும்பம் வந்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார்.

ஏற்கனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை களமிறக்க உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அந்தத் தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ள பஸில் ராஜபக்ச 2024ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான சவாலை ஏற்றுக்கொள்ளப்போகின்றார்.

அந்தச் சவாலில் அவர் வெற்றியடைந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலானது மிகப்பெரிய சவாலாக அவருக்கு அமையாது என்பதே ராஜபக்ச குடும்பத்தினரின் ஊகமாக உள்ளதென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், 2030ஆம் ஆண்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.