அனைத்து கல்வி வலயங்களிலும் இணையவழி கல்வி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்! -கல்வி அமைச்சு

அனைத்து கல்வி வலயங்களிலும் இணையவழி கல்வி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம்! -கல்வி அமைச்சு


தொலைநோக்கு  முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கைளை முன்னெடுக்க முடியாத மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு அனைத்து கல்வி வலயங்களிலும் இணையவழி கல்வி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கான ஆலோசனை  வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வார காலத்திற்குள் இணைய வழி கற்றல் மத்திய நிலையங்கள் நிறுவப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொரோனா வைரஸ் தாகக்த்தின் காரணமாக பாடசாலைகள் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில்  மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக  கல்வித்துறைக்கு பாரிய சவால் ஏற்பட்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைகளை  எப்போது மீள திறக்க முடியும் என்பதை குறிப்பிட  முடியாது.


இணையவழி முறைமை ஊடாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக மாணவர்கள் முழுமையான கற்றல் பயனை பெற முடியாது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இணைய வழி கல்வி முறைமையினை விட பிறிதொரு வழிமுறை ஏதும் கிடையாது.


இணைய வழி கல்வி முறைமை, குரு கெதர ஆகிய செயற்திட்டங்கள் ஊடாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைதளத்திலான இணைய வழி கற்றல் முறைமையில் முதலாம் தரம் தொடக்கம் உயர்தர  மாணவர்களுக்கு அவசியமான பாடத்திட்டங்கள். தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் உள்ள பாடத்திட்டங்களை கற்பதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.


கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் சுமார் 65 ஆயிரம் பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் மாத்திரம் சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள்.


குருகெதர செயற்திட்டம் ஊடாக கற்றல் நிகழ்ச்சிகள் ஐ தொலைக்காட்சி அலைவரிசையிலும், நேத்ரா அலைவரிசையிலும் ஒளிப்பரப்பாகுகின்றன. தரம் 3 தொடக்கம் உயர்தர மாணவர்களுக்கு தேவையான கற்றல் நிகழ்ச்சிகள் இவ்வாறு ஒளிப்பரப்பாகுகின்றன.


இணைய வழி கற்றல் முறைமை, குருகெதர கற்றல் முறைமையினை  பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லாத பெரும்பாலான மாணவர்கள் உள்ளார்கள். இம்மாணவர்களின் கற்றல் நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு அதிக அக்கறை கொண்டுள்ளது.


இம்மாணவர்களுக்கான அனைத்து கல்வி வலயங்களிலும் இணைய கல்வி மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த மத்திய நிலையம் செயற்படும்.  கிழமையில் 5 நாட்களும் காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை இந்த இணைய வழி கற்றல் மத்திய நிலையத்தில் கற்பிக்கப்படும்.


கல்வி வலயங்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் இந்த இணைய வழி மத்திய நிலையத்திற்கு தேவையான  கற்றல் உபகரணங்கள் கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும். ஒரு மத்திய நிலையத்திற்கு குறைந்தப்பட்சம் 10 மடிக்கணணிகள் வழங்கப்படும்.


இரண்டு வார காலத்திற்குள் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும் இதற்கான ஆலோசனை  வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் வசதிகள் இல்லாத மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கருத்திற்  கொண்டு  இந்த இணைய வழி மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படும். இந்த மத்திய நிலையம் பிரதேச  பொது சுகாதார தரப்பினரால்  நாளாந்தம் கண்காணிக்கப்படும்.  


2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்றை வெகுவிரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைகளை திறக்கும் திகதியை உறுதியாக குறிப்பிட முடியாது என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.