34 வருட சேவையின் பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூருல் அமீன் ஓய்வு!

34 வருட சேவையின் பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூருல் அமீன் ஓய்வு!

34 வருட சேவையின் பின் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூருல் அமீன் ஓய்வு பெறுகின்றார்!!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சுமார் 34 வருடங்களாக சேவையாற்றிய உதவிப்பணிப்பாளரான மௌலவி நூருல் அமீன் அவர்கள் தனது 60 ஆவது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவருக்கு ஆரோக்கியம் மிக்க மகிழ்ச்சிகரமான ஓய்வு நிலை வாழ்வுக்காக வாழ்த்துவதோடு வல்ல இறைவனிடம் கையேந்துகிறேன்.

மௌலவி நூருல் அமீன் அவர்களை நான் முதலில் நன்கு அறிந்து கொண்டது 2018ம் ஆண்டு ஹஜ் காலப்பகுதியில் மூன்று வாரங்கள் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய போதாகும். அந்த மூன்று வாரங்களில் சுமார் 7 கருத்திட்டப் பிரேரணைகளை வரைந்து வக்பு சபைக்கு சமர்ப்பிப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது எனலாம். கடமையில் கருத்தான ஒருவராக அந்த மூன்று வாரங்களுள் நான் அவரை அடையாளம் செய்து கொண்டேன். கடமையில் கருத்தானவர் மட்டுமல்ல; வேகமாகவும் விவகமாகவும் விருப்பத்தோடும் அர்ப்பணிப்போடும் தூய்மையோடும் பணியாற்றக் கூடியவருமாக அவர் இருந்தார். அதனால் தான் திணைக்களத்தின் கலை கலாச்சாரப் பிரிவை ஆரம்பித்தபோது அதன் உதவிப்பணிப்பாளராக மௌலவி நூருல் அமீன் அவர்களைத் தெரிவு செய்தேன்.

1961 ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த மௌலவி நூருல் அமீன் அவர்கள் 2021 ஜூன் மாதம் 20 ம் திகதி (இன்று) தனது 60 வயது பூர்த்தியோடு அரச சேவைக்கு பிரியாவிடை வழங்குகின்றார்.

மௌலவி நூருல் அமீன் 1987 மார்ச் 09 ஆம் திகதி கலாச்சார உத்தியோகத்தராக (தரம் III) முதன் முதலில் திணைக்களத்திற்கு நியமனம் பெற்றுள்ளார். பின்னர் 1992 முதல் 1996 வரை வக்ப் சபையின் உதவி செயலாளராக பணியாற்றிய பின் 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விசாரணை அதிகாரியாக (Investigating Officer) திணைக்களத்திலே தொடர்ந்தும் சேவை புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் தரம்-I கலாச்சார உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் உதவிப் பணிப்பாளராக தனது சேவையை திணைக்களத்தில் ஆரம்பித்து, 2016- 2020 வரை வக்ப் பிரிவின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக (Authorized Officer) மௌலவி நூருல் அமீன் அவர்கள் பணியாற்றியுள்ளார்.

இறுதியாக, திணைக்களத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றான கலை மற்றும் கலாச்சார பிரிவு என்னால் ஆரம்பிக்கப்பட்டபோது, அப்பிரிவின் பொறுப்பதிகாரியாக மௌலவி நூருல் அமீன் அவர்களை நான் நியமித்தேன். அப்பிரிவினூடாக, திணைக்களத்தின் வரலாற்றில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான திட்டங்களை நான் முன்வைத்தபோது அவற்றை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடாத்தினார்.

திணைக்களத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு சிறந்த மனிதர்தான் மௌலவி நூருல் அமீன் அவர்கள். திணைக்களத்தின் ஆரம்ப காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான சில உத்தியோகத்தர்களுடன் இணைந்து திணைக்களத்தின் நாளாந்த மற்றும் வருடாந்த பணிகள் அனைத்தையும் மிகவும் திறம்படச் செய்வதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

அஹதிய்யா பாடத்திட்ட நூல்களை தொகுத்தல், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சைகளை நடாத்துவதற்கு பாடத்திட்டங்களை தயாரித்ததுடன் அப்பரீட்சைகளை நடாத்துவதற்கான நிதி ஒதிக்கீட்டினை வருடாந்த வரவு செலவுப் பட்டியலில் (Budget) ஒதுக்கீடு செய்வதற்கு முன்னோடியாக இருந்தமை, வருடாந்த ஹஜ் பயணங்களை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்தமை, இலங்கையிலுள்ள வக்ப் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாயல்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தியமை என இவரது பல சேவைகளை பொதுவாகக் கூறலாம்.

குறிப்பாக, அஹதியா மற்றுல் அல்-குர்ஆன் மத்ரஸா பாடசாலைகளுக்கான பாடத்திட்டம் 2003 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டபோது தன்னாலான பங்களிப்புகளை செலுத்தியுள்ளார். 2006 ஆம் ஆண்டு அஹதியா பாடசாலைகளில் இறுதிச் சான்றிதழ் பரீட்சை ஒன்றை நடாத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதில் இவரது பங்களிப்பும் அதில் காணப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் தீனிய்யாத் மற்றும் தர்மாச்சார்ய போன்ற பாடங்களுக்கான பாடத்திட்ட நூல்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடாத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதில் இவரது முயற்சியும் காணப்பட்டுள்ளது. மூன்று மொழிகளிலும் மொத்தம் 38 நூற்கள் 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. மௌலவி நூருல் அமீன் அவர்களின் பங்களிப்பு அதில் முக்கியமானது. அத்தோடு அல்-ஆலிம் முதவஸ்ஸிதா மற்றும் ஸானவிய்யா பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தன்னாலான பங்களிப்பை மேற்கொண்டுள்ளார் . அதே போன்று 2012 ஆம் ஆண்டு அல்-குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டமொன்றினை அமைக்கும் குழுவில் அங்கத்தவராக இருந்து செயற்பட்டுள்ளார். குறித்த பரீட்சையானது திணைக்களம் மூலம் இரு தடவைகளும், பரீட்சை திணைக்களம் மூலம் ஒரு தடவையும் தேசிய ரீதியில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான மௌலவி நூறுல் அமீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சில்மியாபுர அல்-முர்ஷித் மஹா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் கல்ஹின்னை அல்-மனார் தேசியபாடசாலை, கல்ஹின்னை ஜாமிஅதுல் பதாஹ் அரபுக் கல்லூரி மற்றும் பாணதுரை பள்ளிமுல்லை தீனிய்யாத் அரபுக் கல்லூரி போன்றவற்றின் பழைய மாணவரும் ஆவார்.

பொறுமை, சகிப்புத்தன்மை, பிறருக்கு உதவும் மனப்பாங்கு, பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைத்தல், நீதியாக நடந்துகொள்ளுதல், பிறர் நலனில் அக்கறை கொள்ளுதல் போன்ற பல முக்கியமான நற்பண்புகளை தன்னகத்தே வைத்திருந்த இவர் 1985 ஆம் ஆண்டு மூதுர் நத்வதுல் உலமா அறபுக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் திணைக்களம் மற்றும் அதன் செயற்பாடுகளில் கூடுதலான கவனம் செலுத்தியதோடு, அச்சிந்தனையிலேயே தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். திணைக்கள அதிகாரிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை சிறந்த முறையில் இணங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பதோடு மாத்திரம் தனது கடமைகளை முடித்துக்கொள்ளாது அதன் பின்னரும் குறித்த பிரச்சினைகள் ஏற்படாத வகையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என தனது அனுபவத்தால் அறிவுரைகளை வழங்கும் ஒரு சிறந்த அதிகாரியாகவே நான் அவரை காண்கிறேன்.

தனது வாழ்கையை மக்கள் நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அர்பணித்த ஒரு உத்தமப்புருஷர்தான் மௌலவி நூருல் அமீன் அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

மௌலவி நூறுல் அமீன் அவர்கள் பதுள்ளை மாவட்டத்தின் சில்மியாபுர ஊரைச் சேர்ந்த மௌலவி ஷாஹுல் ஹமீத் மற்றும் பாதிமா தம்பதிகளின் புதல்வராவார். பின்னர் ரக்‌ஷபான தாஹிர் ஹாஜியார் அவர்களின் மகள் ஹாஜியானி ஆசிரியை சித்தி ருவைதா அவர்களை திருமணம் செய்த இவர் மல்வானையை தனது வசிப்பிடமாக மாற்றிக்கொண்டார். நான்கு (04) பிள்ளைகளான, ஆசிரியை zஸீனதுந் நுஹா, நஜீபுர் ரஹ்மான், மௌலவி நஸீஹுர் ரஹ்மான் மற்றும் zஸீனதுந் நுஸ்ஹா ஆகியோரின் தந்தைதான் மௌலவி நூறுல் அமீன் அவர்கள்.

தனது 60 ஆவது பிறந்த தினமான இன்று (2021.06.20) அரச சேவையிலிருந்த ஓய்வு பெறும் மௌலவி நூருல் அமீன் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாகவும் உடல் ஆரோக்கியமுள்ளதாகவும் அமையப் பிரார்த்திப்பதோடு, அவர்களது சேவைகளை இறைவன் பொருந்திக்கொண்டு உயர்ந்த கூலிகளை வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
20.06.2021

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.